மிக்ஜாம் புயல் சென்னை மாநகரைப் புரட்டி எடுத்துள்ள நிலையில், இதனால் மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். ஆபத்தான மற்றும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்த மக்களை பாதுகாப்பு படையினரும், போலீஸாரும் மீட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அடுத்த 1 மணி நேரத்தில் மிக்ஜாம் புயல் கரையைக் கடக்கிறது. ஆந்திர மாநிலம் பாபட்லா என்ற இடத்தில் புயல் கரையைக் கடக்கவுள்ள நிலையில், பலத்த காற்றுடன் அங்கு கனமழை பெய்து வருகிறது.
மிக்ஜாம் புயல் மற்றும் அதிகனமழையால் சென்னை மக்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ள நிலையில், மக்களுக்கு தேவையான உதவிகளை அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன.
இந்த நிலையில், அண்மைக் காலத்தில் சந்தித்திராத மோசமான புயலை நாம் எதிர்கொண்டு இருக்கிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தை விட, 'மிக்ஜாம் புயல் ' இடைவிடாத பெருமழையாக எங்கெங்கும் கொட்டித் தீர்த்திருக்கிறது.
முறையான முன்னேற்பாடுகள், விரிவான கட்டமைப்பு தயாரிப்புகளால் உயிர்ச்சேதம் பெருமளவு குறைத்திருக்கிறோம் தடுத்திருக்கிறோம்.
மீட்பு, நிவாரணப் பணிகள் போர்க்கால வேகத்தில் நடந்துகொண்டு இருக்கிறது.
இன்னலி்ல் இருக்கும் மக்களுடன் நமது அரசு என்றும் துணை நிற்கும்.
கட்சி வேறுபாடுகளைக் கடந்து, மக்கள் சக்தியின் துணைகொண்டு இயற்கைப் பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களைவோம்.
இயற்கையின் கோரத் தாண்டவத்தை மனிதத்தின் துணைகொண்டு வெல்வோம்!
அரசோடு கரம் கோத்து சகமனிதரின் துயர் துடைத்திட தொண்டுள்ளம் படைத்த எல்லோரும் ஓரணியாய் திரள கரம்கூப்பி அழைக்கிறேன்.
வெல்லட்டும் மானுடம்! என்று தெரிவித்துள்ளார்.