மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்-இன் வளர்ப்பு மகள் சுதாவின் கணவர் விஜயன் கொலை வழக்கில் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடியாக 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
கடந்த 2008-ஆம் ஆண்டு காரில் சுதாவும் அவரது கணவர் விஜயனும் சென்று கொண்டிருந்தபோது, சிலர் வழிமறித்து இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்தனர். சுதாவின் தங்கை பானு சொத்துப் பிரச்சனை காரணமாக கூலிப்படையை வைத்து கொலை செய்ததாக இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி கண்டுபிடித்தது.
7 ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் விஜயன் மனைவியின் தங்கை பானு, கூலிப்படையை நியமித்த காவலர் கருணா மற்றும் கூலிப்படையை சேர்ந்த சுரேஷ், கார்த்தி உள்பட ஏழு பேரையும் குற்றவாளிகள் என்று தீர்பளித்துள்ளனர்.
ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
விஜயன் மனைவி சுதா இன்று நீதிமன்றத்திற்கு வந்து, கணவர் கொலை வழக்கில் 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை வரவேற்பதாக கூறினார்.