முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தேர்தல் பிரச்சாரத்தில் எம்ஜிஆர் வேடமிட்ட ஒருவர் அவரது காலில் விழுந்ததற்கு முன்னாள் அதிமுக எம்பி கே சி பழனிச்சாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை மாவட்டத்தில் கோ புதூரில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது எம்ஜிஆர் வேடமிட்டு அதிமுக பிரமுகர் ஒருவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலகலப்பூட்டினார். அப்போது எடப்பாடி பழனிச்சாமியிடம் பாராட்டுகளை பெற மேடைக்கு சென்றார்.
இதையடுத்து அவர் எடப்பாடி பழனிச்சாமியின் கால்களில் விழுந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எம்ஜிஆர் வேடமிட்ட ஒருவர் எடப்பாடி பழனிச்சாமி காலில் விழுந்தது சரியா என அதிமுக நிர்வாகிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கு முன்னாள் அதிமுக எம்பி கே சி பழனிச்சாமியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புகைப்படத்துடன் தனது ட்விட்டர், பேஸ்புக்கில் வெளியிட்ட அவர் கூறுகையில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்! புரட்சித் தலைவர் பாரதரத்னா எம்ஜிஆர் அவர்களின் வேடமிட்டவரை எடப்பாடி தன் காலில் விழ வைத்தது சரியா? இன்றளவும் அதிமுகவின் அடிநாதமாக விளங்கிக் கொண்டிருப்பவர் எம்ஜிஆர்
அவரைப் போலவே வேடமிட்டவரை எடப்பாடி தன் காலில் விழுவதை கண்டு ரசிப்பது கட்சிக்கு இழைக்கும் மிகப் பெரிய துரோகம்! என தனது கண்டனத்தை கேசி பழனிச்சாமி பதிவு செய்துள்ளார்.