2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை மெகா தடுப்பூசி முகாமால் வாரந்தோறும் அதிகரித்து வருகிறது என தகவல்.
கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடந்து வந்த நிலையில் இந்த வாரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆம், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக ஞாயிறுதோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பல லட்சம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த வார இறுதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று அடுத்த மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முன்னதாக சனிக்கிழமையே மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அதன்படி தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டு வரும் சனிக்கிழமை 6வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. சென்னையில் மட்டும் 2,500 முகாம்கள் நடத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை மெகா தடுப்பூசி முகாமால் வாரந்தோறும் அதிகரித்து வருகிறது. இந்த வாரம் நடைபெற உள்ள மெகா தடுப்பூசி முகாமில் 30,42,509 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.