தமிழகத்திம் மே இறுதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மே 25 முதல் சென்னையிலிருந்து விமான சேவைகளை தொடங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் பல இடங்களில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு மே இறுதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மே 25 முதல் சென்னையிலிருந்து பெங்களூர், டெல்லி மற்றும் கொல்கத்தாவிற்கு விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே முதல் கட்ட ஊரடங்கு முடிய இருந்த நிலையில் ஏப்ரல் 15க்கு பிறகு விமான சேவைகளை தொடங்குவதற்காக முன்பதிவுகள் தொடங்கப்பட்டன. ஆனால் இரண்டாம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்ததால் முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டன. அப்போது முன்பதிவு செய்தவர்கள் பலர் தங்களது பணம் திரும்ப தரப்படவில்லை என புகார் செய்து வருகின்றனர். இந்நிலையில் மறுபடி முன்பதிவுகள் தொடங்கியுள்ள நிலையில் இதுவும் ரத்து செய்யப்படுமோ என சிலர் குழப்பத்தில் உள்ளதாக தெரிகிறது. ஆனால் இந்த முறை நாட்டில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் விமான சேவை ரத்து செய்யப்படாது என்றே கூறப்படுகிறது.