Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லிப்டில் சிக்கிக் கொண்ட கவிஞர் மனுஷ்யபுத்திரன்! மாற்றுத்திறனாளிகளை கண்டுகொள்ளாத பொது சமூகம்!

லிப்டில் சிக்கிக் கொண்ட கவிஞர் மனுஷ்யபுத்திரன்! மாற்றுத்திறனாளிகளை கண்டுகொள்ளாத பொது சமூகம்!
, புதன், 27 அக்டோபர் 2021 (10:06 IST)
கவிஞரும் திமுக பேச்சாளருமான மனுஷ்யபுத்திரன் இப்போது சிம்பு நடிக்கும் பத்து தல என்ற படத்தில் நடிக்கிறார்.

இதையொட்டி அவர் கன்னியாகுமரிக்கு படப்பிடிப்புக்கு சென்ற போது ஏற்பட்ட கசப்பான அனுபவம் பற்றி சமூகவலைதளத்தில் ஒரு பதிவை எழுதியுள்ளார். அதில் ’சென்னையைவிட்டுக் கிளம்பி 24 மணி நேரம் ஆகிறது. கன்னியாகுமரிக்கு படப்பிடிப்பிற்கு வந்திருக்கிறேன். பயணம் தொடங்கியதிகிருந்து இந்த நாட்டில் ஒரு சக்கர நாற்காலி உபயோகிப்பவரின் துயரங்கள் எங்கு போனாலும் என்னை தொடர்ந்தவண்ணம் இருக்கின்றன. ரயிலிலில் இருக்கும் கழிவறையை ஒரு சக்கர நாற்காலி உபயோகிப்பவர் எப்படி பயன்படுத்த முடியும் என்று எவ்வாறு யோசித்தாலும் புலப்படவில்லை. அது ஒரு மனிதவிரோததன்மை கொண்ட டிசைன். ரயிலைவிட்டு இறங்கினால் எங்குபோனாலும் படிக்கட்டுகள். சக்கர நாற்காலி நுழையமுடியாத குறுகலான பாதைகள். கன்னியாகுமரியில் ஒரு கடல் பார்த்த உயர்தர விடுதியில் டீலக்ஸ் ரூம் போட்டிருந்தார்கள். செக் இன் செய்துவிட்டு லிஃப்ட்டில் ஏறிய ஒரு நிமிடத்தில் லிஃப்ட் நின்றுவிட்டது. அந்தரத்தில் முக்கால் மணி நேரம் தொங்கினேன். கடைசியில் ஒரு ஆள் லிஃப்டின் வயிற்றைப்பிளந்து ஒரு சிறிய சதுரத்திற்குள் உடலை பிதுக்கி உள்ளே குதித்தார். என்னென்னவோ செய்துபார்த்தார். லிஃப்ட் நகரவில்லை. வெளியே சில முகங்கள் தெரிந்தன " அவரை இந்த ஓட்டை வழியாக தூக்க முடியும்? " என்று ஒருவர் ஆலோசனை சொன்னார்.

" என்னய்யா விளையாடுறீங்களா?" என்று கத்தினேன். மிகவும் படபடப்பாகிவிட்டது. பிறகு யாரையோ கூட்டி வந்து என்னவோ செய்து லிஃப்ட் ரெடியானது. நான்காம் தளத்திற்குச் சென்று அறைக்குள் நுழைந்தால் வேறொரு பிரச்சினை. டாய்லெட்டிற்குள் வீல் சேர் போகமுடியாதபடி குறுகலான வாயில். கொரோனோ வந்தபோது இந்த துயரத்தை திருச்சி காவேரி மருத்துவமனையில் அனுவித்திருந்ததால் முன்னெச்சரிக்கையாக ஒரு மினி வீல் சேரும் கொண்டுவந்திருந்தேன். ஆனால் அத்தோடு என்னை விட்டால் எப்படி? மினி வில் சேர் உள்ளே போனாலும் டாய்லெட் சிட் அவுட்டிற்கு முன்னால் ஒரு பெரிய படி. என்ன எழவுக்கு அந்தப் படி என்று தெரியவில்லை. அதாவது மினி வீல் சேர் இருந்தாலும் நானாக அந்த படியைக் கடக்கமுடியாது. அந்த ஈவில் ஹோட்டலில் தங்க முடியாது என்று காலிசெய்துவிட்டு வெளியே வந்துவிட்டேன். பக்கத்தில் இருந்த ஒவ்வொரு ஹோட்டலாக தேடி அலைந்தோம். எங்கும் சக்கர நாற்காலி செல்லும் சறுக்குபாதை கிடையாது. டாய்லெட்டில் வீல் சேர் போகாது. ஒருவழியாய் 50 சதவிகிதம் பரவாயில்லை என்று தோன்றிய ஒரு ஹோட்டலில் அக்கடா என்று இடுப்பை சாய்த்திருக்கிறேன்.

நான் புரிந்துகொண்டது, இந்த நாட்டில் பெரும்பாலான இடங்கள் என்னைபோன்றவர்களுக்கானதல்ல. அதேபோல ரயில் பெட்டி செய்பவர்கள், வீடு கட்டும், மிகப்பெரிய ஹோட்டல்களைக்கட்டும் எஞ்சினீயர்கள் ஒரு குறைந்தபட்ச சென்சிடிவிட்டிகூட இல்லாதவர்கள். ஒரு சக்கர நாற்காலி உபயோகிக்கும் மனிதன் இந்த இடத்தை உபயோகிக்ககூடும் என யாருக்கும் எந்த உணர்வும் இல்லை என்பதுதான் உண்மை. நியாயமாக இதுபோன்ற ஹோட்டல்களின் லைசென்ஸை அரசு ரத்து செய்யவேண்டும். Inclusiveness பற்றி எவ்வளவோ பேசுகிறோம். ஆனால் அதற்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?

நாளை படப்பிடிப்பில் எனக்கு அழுகிற காட்சி எதுவும் இருந்தால் இதையெல்லாம் நினைத்துக்கொண்டால் போதும், கிளிசரின் இல்லாமலேயே கண்ணீர் வரும். இரண்டு கால்கள் இருப்பவர்கள் தயவு செய்து அதை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் மிகக்கொடூரமான ஒரு சமூகத்தில் வாழ்கிறீர்கள்.’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

13 ஆயிரமாக பதிவான தினசரி கொரோனா பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!