பந்தயத்திற்காக முழு மது பாட்டிலை ஒரே மடக்கில் குடித்த 40 வயது நபர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குளச்சல் அருகே சுபின் என்ற 40 வயது நபர் தனது நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்தபோது, அவரது நண்பர்கள் ஒரு முழு மது பாட்டிலை ஒரே மடக்கில் குடித்தால் ரூ. 500 தருவதாக பந்தயம் வைத்துள்ளனர். பந்தயத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆவலில், சுபின் அந்த பாட்டிலை ஒரே மூச்சில் குடித்தார்.
ஆனால், சில நொடிகளிலேயே அவர் மயங்கி விழுந்தார். அவர் இறந்துவிட்டதாக எண்ணிய அவரது நண்பர்கள், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சுபின் உயிருடன் இருப்பதை கண்டு உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.