போலி சான்றிதழ்கள் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் சங்கரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம் அருகே கோவிலம் பூண்டி ஆமா கிராமத்தில் பள்ளி கல்லூரி சான்றிதழ்கள் ஒரே இடத்தில் மொத்தாக கிடந்துள்ளன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சான்றிதழ்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட போது, அவை அனைத்தும் போலி சான்றிதழ்கள் என்பது தெரியவந்தது.
இதில் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் சங்கர் முக்கிய புள்ளியாக செயல்பட்டுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலி சான்றிதழ் தொடர்பாக தீட்சிதர் சங்கர், நாகப்பன் ஆகியோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விசாரணையில், கேரளா பல்கலைக்கழகம், கர்நாடகா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்கள் பெயரில் போலி சான்றிதழ் வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் அண்ணாமலை பல்கலைக்கழக பெயரில் போலி சான்றிதழ் தயாரித்ததாக நிர்வாகம் புகார் தெரிவித்துள்ளது. 5,000க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்கள் அச்சிட்டு வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 1000-த்திற்கும் மேற்பட்ட சான்றிதழ்களை அச்சடித்து வழங்குவதற்காக வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இரண்டு கம்ப்யூட்டர்கள், லேப்டாப், பிரிண்டர் செல்போன் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.