கோயம்புத்தூர் அருகே அதிரடைப்படையினர் முகாமிற்குள் காட்டு யானை புகுந்ததால் அதிரடிப்படையினர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் ஆனைக்கட்டி வழியில் மாங்கரை ஆயுர்வேத மருத்துவமனை அருகே அதிரடிப்படை வீரர்கள் முகாம் உள்ளது. நக்சலைட்டுகள் நடமாட்டத்தை கண்காணிக்க கேரள எல்லை அருகே அமைந்துள்ள இந்த முகாமில் தங்கியுள்ள வீரர்கள் நேற்று மாலை 6 மணியளவில் இரவு உணவு சமைத்து கொண்டிருந்திருக்கிறார்கள்.
இந்நிலையில் வாயில் காயத்துடன் உள்ள மாக்னா யானை ஒன்று அடிக்கடி தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வந்துள்ளது. அந்த மாக்னா யானை திடீரென அதிரடிப்படையினர் முகாமிற்குள் நுழைந்ததால் அதிர்ச்சியடைந்த வீரர்கள் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடியுள்ளனர். பிறகு அங்கிருந்த வேனை சிறிது சேரம் உலுக்கி விட்டு வேறு பகுதிக்கு சென்றுள்ளது மாக்னா யானை. அதை பின் தொடர்ந்த வீரர்கள் பிறகு அதை காட்டுப்பகுதிக்குள் விரட்டியடித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.