Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த மாபா பாண்டியராஜன் !

ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த மாபா பாண்டியராஜன் !
, வெள்ளி, 8 நவம்பர் 2019 (08:43 IST)
அமைச்சர் மாபா பாண்டியராஜனுக்கு எதிராகப் போராட்டங்கள் எதுவும் நடத்த வேண்டாம் என வலியுறுத்திய ஸ்டாலினுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

1975 ஆம் ஆண்டு எமர்ஜென்சியின் போது மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது அவரது தவறான செய்கைகளுக்காகதான் என அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியது. இதற்கு கண்டனங்கள் தெரிவித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இந்நிலையில் மாஃபா பாண்டியராஜன் வீட்டின் முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மாஃபா உருவ பொம்மைக்கு பாடை கட்டி எரித்து எதிர்ப்பை காட்டியுள்ளனர். இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்ட மாஃபா அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே! உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே! நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்! முதல் முறை என் வீட்டுக்கு எதிரில் என் உருவத்திற்கு பாடை கட்டி இழுத்து தீக்கிரையாக்கியதைக் கண்டேன்  என்று கூறியிருந்தார். 

இதனைத்தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் ’அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை தவிர்த்திடுங்கள். அமைச்சர் பாண்டியராஜன் என்ன படித்தார், எதைக் கற்றார், எதை புரிந்து கொண்டார் என்பதை அவர் பேச்சு காட்டிவிட்டது. நாம் பயனுள்ள சொற்களையே பயன்படுத்துவோம். இழி சொற்களை ஏற்க மாட்டோம்’ என கூறியுள்ளார். 
இந்நிலையில் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார் பாண்டியராஜன். செய்தியாளர்களை சந்தித்த அவர் ‘ஸ்டாலின் பற்றி நான் பேசியதில் சில தவறான புரிதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக நான் முதல்வரிடம் பேசி இருக்கிறேன். முதல்வரிடம் என்னுடைய பேச்சு குறித்து குறிப்பிட்டேன். எனக்கு எதிரான போராட்டத்தை திமுகவினர் தவிர்க்க வேண்டும் எனக் கூறிய ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அயோத்தி வழக்கு: ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் குவிப்பு; நிலவும் பதற்றம்