Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 13 April 2025
webdunia

விறுவிறுப்பான வேலைகளுடன் துவங்கும் மதுரை மெட்ரோ ரயில் திட்டம்!

Advertiesment
Madurai Metro Rail
, வியாழன், 6 ஏப்ரல் 2023 (13:01 IST)
மதுரை மெட்ரோ ரயில்வே திட்டத்துக்கான அறிக்கை ஜூன் மாதம் முடிக்கப்பட்டு, 2024ம் ஆண்டு இறுதியில் கட்டுமான பணிகள் துவங்கும் என மெட்ரோ ரயில்வே நிர்வாக இயக்குனர் சித்திக் தெரிவித்துள்ளார்
 
மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையிலான 31.30 கிலோ மீட்டர் தொலைவுக்கு 18 நிலையங்களுடன் மெட்ரோ ரயில் சேவை செயல்படுத்துவதற்கான பணிகளை சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவனம் மேற்கொண்டிருக்கிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை ஆர்.வி.அசோசியேட்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.
 
இந்த திட்டத்துக்கு நடப்பு நிதிநிலை அறிக்கையில் ரூ.8,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மெட்ரோ ரயில்வே நிர்வாக இயக்குனர் சித்திக் தலைமையில் இன்று நடைபெற்றது.
 
மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜீத் சிங், மதுரை மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜூனன், மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஆனந்த் பதம்னாபன் மற்றும் வருவாய், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை, காவல்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட துறைகளின் சார்பிலான உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
 
ஆலோசனை கூட்டத்தில் நிர்வாக இயக்குனர் சித்திக் பேசுகையில்,
"100 ஆண்டுக்கான தொலைநோக்கு பார்வையுடன் மதுரை மெட்ரோ ரயில்வே திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 
 
2027 ஆம் ஆண்டு இறுதிக்குள் கட்டுமான பணிகளை நிறைவு செய்ய வேண்டும்.நிலம் இருக்கிறது என்பதற்காக அங்கு நிலையம் அமைக்காமல், மக்களின் போக்குவரத்து தேவையின் அடிப்படையில் அமைக்க வேண்டும். ரயில்வே நிலையம் - பெரியார் பேருந்து நிலையம் - மீனாட்சி அம்மன் கோவில் மூன்றையும் இணைக்கும் வகையில் ஒரு நிலையம் அமைக்கப்பட வேண்டும். விமான நிலையத்தை இணைக்கும் இடையே வழித்தட திட்டம் இப்போதைக்கு இல்லை. இரண்டாம் கட்ட வழித்தடத்தில் இருக்கும்" என்றார்
 
பின்னர் இயக்குநர் சித்திக் அளித்த பேட்டியில், "மதுரை மெட்ரோ ரயில்வே திட்டத்துக்கு முன்னுரிமை அளித்து பணிகளை துரிதப்படுத்த அரசு அறிவுறுத்தி உள்ளது. மதுரை தொன்மையான ஊர் என்பதால் இங்கு நகர் பகுதிக்குள் அமையும் வழித்தடம் பூமிக்கு கீழே சுரங்கப்பாதை வடிவில் அமைக்கப்பட உள்ளது.
 
மீனாட்சி அம்மன் கோவிலை முன்வைத்து கோரிப்பாளையம் முதல் வசந்த நகர் வரையிலான வழித்தடம் வைகை ஆற்றுக்கு கீழே சுரங்கப்பாதையில் அமையும். திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையிலான 31 கிமீ வழித்தடத்தில், 26 கிமீ மேம்பாலமாகவும், 5 கிமீ பூமிக்கு அடியிலும் கட்டமைக்கப்பட்ட உள்ளது. மொத்தம் 18 நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
 
இந்த திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை ஜூன் மாதத்திற்குள் முடித்து அறிக்கையை அரசுக்கு அனுப்ப வேண்டும். 2024ம் ஆண்டு இறுதியில் கட்டுமான பணிகள் துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
 
மத்திய - மாநில அரசுகள் 20% + 20% நிதியும், நிதி நிறுவனங்கள் 60%  நிதி பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக 3 பெட்டிகளுடன், 5 முதல் 10 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்" என கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த மிரட்டல் எல்லாம் என்கிட்ட விடக்கூடாது: வேல்முருகன் எம்.எல்.ஏவை எச்சரித்த சபாநாயகர்..!