தமிழகத்தில் ஆதினங்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மதுரைச் சேர்ந்த ஜெகதலப் பிரதாபன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடர்ந்த வழக்கில், மதுரை ஆதீனத்தின் 292-வது ஆதீனமாக அருணகிரிநாதர் இருந்த போது 293-வது ஆதீனமாக நித்யானந்தா தன்னை தானே அறிவித்து கொண்டது சட்டத்துக்கு விரோதமான செயல் என அதில் குறிப்பிட்டிருந்தார். மேலும் அந்த மனுவில், நித்யானந்தா மதுரை ஆதீன மடம் உள்பட பல்வேறு சைவ மடங்களை சட்டவிரோதமாக கைப்பற்ற பல்வேறு வகையில் முயற்சி செய்து வருகிறார். இதனால் ஆதீன மடத்துக்குள் நுழையவும், அருணகிரிநாதரின் நிர்வாகத்தில் தலையிடவும் நித்யானந்தாவுக்கு தடை விதிக்கவும், நித்யானந்தாவிடமிருந்து ஆதீன மடத்தை பாதுகாக்கவும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வழக்கில் நித்தியானந்தாவுக்கு மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைய இடைக்கால தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை ஆதீன நிர்வாகத்துக்குட்பட்ட கோயில்களிலும் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து எந்த ஆதினமாக இருந்தாலும் முறைகேட்டில் ஈடுபட்டால் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.