Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாடு முட்டி பள்ளிக் குழந்தை படுகாயம்: கால்நடைகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!- அன்புமணி ராமதாஸ்

மாடு முட்டி பள்ளிக் குழந்தை படுகாயம்: கால்நடைகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!- அன்புமணி ராமதாஸ்
, வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (12:53 IST)
சென்னையில் பள்ளிக் குழந்தையை பசுமாடு முட்டி தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ‘’சென்னையில் கால்நடைகளின் நடமாட்டத்தை  கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சியும், காவல்துறையும்  நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை அரும்பாக்கம் சி.எம்.டி.ஏ. பகுதியில் சாலையில் கட்டுப்பாடின்றி திரிந்த பசு மாடு, அந்த வழியே  சென்ற பள்ளி சிறுமியை   முட்டித் தூக்கி வீசியது. இதுபற்றி பாமக தலைவரும் எம்.பி.,யுமான அன்புமணி ராமதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’சென்னையில் மாடு முட்டி பள்ளிக் குழந்தை படுகாயம்: கால்நடைகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!

சென்னை அரும்பாக்கம் சி.எம்.டி.ஏ. பகுதியில் சாலையில் கட்டுப்பாடின்றி திரிந்த பசு மாடு, அவ்வழியே சென்ற பள்ளிக் குழந்தையை  முட்டித் தூக்கி வீசியதில் அந்தக் குழந்தை படுகாயமடைந்து மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறாள்.  பள்ளி சென்று திரும்பிய  குழந்தை  வீட்டுக்கு செல்வதற்கு பதிலாக மருத்துவமனைக்கு சென்றிருப்பது வேதனையளிக்கிறது. காயமடைந்த குழந்தை  விரைவில் முழு நலம் பெற்று வீடு திரும்ப எனது விருப்பங்களைத்  தெரிவித்துக் கொள்கிறேன்.

பள்ளிக்குழந்தை  முட்டித் தூக்கி வீசப்பட்டது மட்டுமின்றி, சாலை விபத்துகளுக்கும் கால்நடைகள் காரணமாக உள்ளன. சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும், அதிக போக்குவரத்து நிகழும் கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையிலும்  கால்நடைகள்  திடீரென சாலைகளுக்குள் நுழைவதால் அதிக விபத்துகள் நடக்கின்றன; அதனால் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இவை தடுக்கப்பட வேண்டும்.

சென்னை மாநகர எல்லைக்குள் கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கால்நடைகளைக் கட்டுப்படுத்த  எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாதது தான் இதற்கு காரணம். சென்னை மாநகரில் கால்நடை வளர்ப்பை சட்டத்தின் வழியாக மட்டுமே பார்க்க முடியாது.  கால்நடைகள் சென்னையின் பூர்வகுடி மக்களின் வாழ்வாதாரம் சார்ந்தவை என்பதால், அந்தக் கோணத்திலும் தான்  பார்க்க வேண்டியுள்ளது.  அதேநேரத்தில் கால்நடைகளால் மக்களுக்கு எந்த பாதிப்பும்  ஏற்படுவதை அனுமதிக்க முடியாது.

பொதுமக்களின் குறிப்பாக குழந்தைகளின்  பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சென்னையில் கால்நடைகளின் நடமாட்டத்தை  கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சியும், காவல்துறையும்  நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு  தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை  தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் சிறுமியை முட்டி தூக்கி வீசிய பசுமாடு...அதிர்ச்சி சம்பவம்