Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் மாஞ்சா நூல் பயன்படுத்த நிரந்தர தடை: அரசாணை வெளியீடு!

Webdunia
புதன், 1 நவம்பர் 2023 (09:19 IST)
தமிழ்நாட்டில் அவ்வப்போது மாஞ்சா நூல் பயன்படுத்துவதால் உயிர் இழப்புகள் ஏற்பட்டு வருவதை அடுத்து நிரந்தரமாக மாஞ்சா நூல் பயன்படுத்த தடை விதித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.  இது குறித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைச் செயலாளர் சுப்ரியா சாஹூ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
“காற்றாடி பறக்கவிடும் போட்டிகளின் போது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் குறிப்பாக பறவைகளுக்கும் பலத்த காயங்கள், உயிரிழப்புகள் ஏற்பட மாஞ்சா நூலே காரணமாக உள்ளது. மேலும், இவை வடிகால் பாதைகள், நீர்நிலைகளை அடைப்பதன் மூலம் கடுமையான சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. இது பறவைகள், பிற விலங்கினங்களுக்கு மிக ஆபத்தான சூழலை ஏற்படுத்துகிறது.
 
இந்நிலையில் விலங்குகள், பறவைகள், பொதுமக்கள் உயிரைப் பாதுகாக்கும் பொருட்டு மாஞ்சா நூல் என பிரபலமாக அறியப்படும் நைலான், நெகிழி அல்லது செயற்கை பொருள்களால் தயாரிக்கப்படும் மக்கும் தன்மையற்ற காற்றாடி நூலுக்கு அரசு முழுமையான தடை விதித்துள்ளது. அதன்படி, மாஞ்சா நூல் தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்தல், கொள்முதல் செய்தல், இறக்குமதி செய்தல், பயன்படுத்துதல் போன்ற செயல்பாடுகள் முழுமையாக தடை செய்யப்படுகிறது.
 
இது தொடா்பாக அக்.6-ம் தேதி உத்தரவு வெளியிடப்பட்டு, அக்.30-ம் தேதி தமிழ்நாடு அரசிதழில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், வனத்துறை வனச்சரகர்கள், அதற்கும் மேல்நிலை அதிகாரிகள், தமிழ்நாடு காவல்துறை உதவி ஆய்வாளர்கள், அதற்கும் மேல்நிலை அதிகாரிகள், நகராட்சி, மாநகராட்சி ஆணையர்கள், உள்ளாட்சி அதிகாரிகளுக்கு மேற்படி அறிவிப்பை செயல்படுத்தும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
இந்தத் தடை உத்தரவை மீறுபவர்களுக்கு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986-இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.”
 
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments