போக்குவரத்து துறை அமைச்சர் விஜய்பாஸ்கருக்கு எதிராக கரூர் மாவட்ட எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் போர்க்கொடி தூக்கியுள்ள விவகாரம் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகமெங்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆனால் கடந்த 4ம் தேதி கரூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவானது மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதோடு, கரூர் மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஏற்பாட்டினால், கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதோடு, மூத்த நிர்வாகிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மிகவும் புறம் தள்ளப்பட்டனர்.
கரூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்து வந்த பட்டதாரி ஆசிரியை கீதா மணிவண்ணன், அரசியலில் அவருக்கு பிடித்த முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசியலை விரும்பி தனக்கு கிடைக்க இருந்த அரசு ஆசிரியை பதவியை கூட தூக்கி எரிந்து விட்டு, தனக்கென ஒரு இடத்தை பிடிக்க, முதன் முதலில், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலராக போட்டியிட்டு தேர்வு செய்யப்பட்டார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவோடும், மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரையின் ஆதரவோடும் கரூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக பதவி ஏற்றார். பின்னர், கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க வேட்பாளரான இவர் மொத்தம் 83977 வாக்குகள் பெற்றும், அதே நேரத்தில் தன்னை எதிர்த்து நின்ற தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்த, புதிய தமிழகம் வேட்பாளர் வி.கே.ஐயர் 48676 வாக்குகள் பெற்றதோடு, அவரை விட 35 ஆயிரத்து 301 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றார்.
ஆனால், கரூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 4 சட்டமன்ற தொகுதி தேர்தலில் கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே தேர்தல் நடைபெற்றதே, தவிர, அரவக்குறிச்சி தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த மூன்று தொகுதிகள் அ.தி.மு.க இரு இடங்களிலும், குளித்தலை தொகுதி தி.மு.க கைப்பற்றியது. ஆனால், கரூர், கிருஷ்ணராயபுரம் அ.தி.மு.க வெற்றி பெற்றதை அடுத்து, கரூர் வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டதை விழாக்கோலமாக கொண்டாடினார்கள்.
ஆனால் அங்கேயே கிருஷ்ணராயபுரம் அ.தி.மு.க எம்.எல்.ஏ வெற்றியை யாரும் கண்டுகொள்ளவில்லை. அப்போது முதலே கீதா மணிவண்ணனை புறக்கணித்த அமைச்சரும், கரூர் எம்.எல்.ஏ வுமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியும், தனது அமைச்சர் பதவி நிலைக்க வேண்டுமானால், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் ஆதரவு கண்டிப்பாக வேண்டும், ஒரு மாவட்டத்தில் ஒரு எம்.எல்.ஏ கூட ஆதரவு இல்லை என்றால், மேலும் சிக்கல் என்பதினால், ஏதோ, ஆங்காங்கே முன்னிலைப்படுத்தி வந்தார்.
ஆனால் தற்போது கடும் கோஷ்டி பூசலால் கரூர் மாவட்ட அ.தி.மு.க. கலகலத்து போயுள்ளது என்று சொல்லப்படுகிறது. இதனால் அமைச்சர் கோஷ்டி என்றும், அவருக்கு எதிரானவர்கள் சேர்ந்து மற்றொரு கோஷ்டியும் உருவாகியுள்ளது. ஏற்கெனவே, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, தினகரன் அணியிலிருந்து கரூர் மாவட்ட அ.தி.மு.க.வினருக்குக் குடைச்சல் கொடுத்துவருகிறார்.
இந்தச் சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியிலுள்ள அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும், கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வான கீதா மணிவண்ணனுக்கும் இடையே நீறுப்பூத்த நெருப்பாக இருந்த மோதல் எரிமலையாக வெடித்துள்ளது.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதா மணிவண்ணனின் விளம்பரம், மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரையின் விளம்பரங்களை மறைத்து தன்னுடைய அரசியலை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தது. அந்த நூற்றாண்டு விழாவின் மூலமாகவே தெரியவந்துள்ளது.
மேலும் முழுக்க, முழுக்க முன்னாள் அமைச்சரும், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ வுமான செந்தில் பாலாஜியை வசை பாடியதோடு, ஒட்டு மொத்த எம்.எல்.ஏ க்களையும் எட்டப்பன்கள் என்றதோடு, டி.டி.வி தினகரனை சாடாமல் முழுக்க, முழுக்க செந்தில் பாலாஜியை வசைபாடியே கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது கூட்டத்தில் இருந்து பொதுமக்கள் வெளியேறிய போது, காவல்துறையினரை வைத்து மிரட்டி கூட்டத்தில் அமரும் படி கூறியுள்ளனர்.
மேலும், விஜயபாஸ்கர் தன்னை ஒதுக்குவதை அறிந்த எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன், அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற கூட்டம் மற்றும் அரசு சார்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு அவர் வரவில்லை. மேலும், தனக்கு வாக்களித்த பொதுமக்களின் குறைகளை கேட்டதோடு, டெங்கு காய்ச்சல் பரவி வருகின்றதா என்று கடந்த 6 ம் தேதி அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அமைச்சர் இல்லாமல் ஆய்வா? என்று அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் கேள்வி கேட்டபடி இருக்க, இந்த பெண் எம்.எல்.ஏ வின் அதிரடி ஆய்விற்கு, அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள் பலர் சபாஷ் போட்டுள்ளனர்.
எது எப்படியோ முதல்வர் முன்னிலையில் நடைபெற்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி நிகழ்ச்சியை பொறுத்தவரை, கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதா மணிவண்ணனை பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் மதிக்கப்பட வில்லை என்பது ஒரு புறம் இருக்க, கட்சியின் மூத்த நிர்வாகி மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பித்துரையையும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மதிக்கவில்லை என்பது கீதா மணிவண்ணன் ஆதரவாளர்கள் புலம்புகின்றனர்.