கொரோனாவால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமாரின் உடல்நிலை மிகவும் சீராக உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் அமைச்சர்கள் உள்பட பலர் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஒரு சிலர் மட்டுமே குணமாகி வந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்த குமார் அவர்களுக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பதும் அதனை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிகிச்சை பெற்று வரும் வசந்தகுமார் எம்பி அவர்களுக்கு வென்டிலேட்டர் மூலம் சுவாசம் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து இப்போது அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
அவர் உடல்நிலை சம்மந்தமாக இன்று செய்தியாளர்களை சந்தித்த போது அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். அப்போது ‘எம்.பி. வசந்தகுமாரின் உடல்நிலை சீராக உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்குத் தேவையான வசதிகளை வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளோம். தேவைப்பட்டால் தமிழக எம் எல் ஏக்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்படும்’ எனக் கூறியுள்ளார்.