தமிழக சட்டசபையில் நேற்று சட்டசபை எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.க்கு திமுக கொள்கைகளை பரப்பியதற்கு நன்றி தெரிவித்தார்.
முன்னதாக மீன் மற்றும் பால்வளத்துறை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக உறுப்பினர் ரத்தினசபாபதி முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நடித்த படகோட்டி மற்றும் ஒளிவிளக்கு படங்களில் இருந்து பாடல் பாடினார்.
இதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அமைச்சர் செல்லூர் ராஜூ ரத்தினசபாபதிக்கு ஆதரவு அளிக்க, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு திரைப்படங்களில் நடிகர்கள் உதட்டை மட்டுமே அசைக்கின்றனர். அந்த பாடலை ஒருவர் எழுதுகிறார். ஒருவர் இசையமைக்கிறார். ஒருவர் பாடுகிறார் என குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்த போது இந்த பாடல்களை பாடியுள்ளார் என பேசினார். பின்னர் திமுக உறுப்பினர்கள் சுறுசுறுப்புடன் காணப்பட்டனர்.
தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின் எம்.ஜி.ஆர். திமுக பொருளாளராக இருந்தவர், அவரது படங்களை பார்க்க மகாலட்சுமி தியேட்டருக்கு பலமுறை சைக்கிளில் சென்றிருக்கிறேன் என கூறினார். மேலும் திமுக கொள்கைகளை மக்களிடையே பிரபலப்படுத்தியதற்காக எம்.ஜி.ஆர்.-க்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார்.