மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 33 தொகுதிகளில் வெற்றி பெரும் என லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் வெளியிட்ட கருத்துக்கணிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி சென்னையின் மூன்று தொகுதிகள் உள்பட 33 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 5 தொகுதிகளிலும், அமமுக கூட்டணி 2 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் வெளியிட்ட கருத்துக்கணிப்புக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று லயோலா கல்லூரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக லயோலா கல்லூரியின் எந்த துறையும் தேர்தல் கருத்துக்கணிப்புகளில் ஈடுபடவில்லை என்றும், இந்த கருத்துக்கணிப்பை ஒருசில ஊடகங்கள் லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு என்று தவறாக செய்தி வெளியிட்டு வருவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சில தேர்தல்களிலும் இதேபோன்று பண்பாட்டு மக்கள் தொடர்பகம் வெளியிட்ட கருத்துக்கணிப்புக்கு லயோலா கல்லூரி விளக்கம் அளித்து மறுப்பு அறிக்கைகளை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு என்று திமுகவினர் மகிழ்ச்சியுடன் இருந்த நிலையில் இந்த மறுப்பு அறிக்கை அவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிகிறது