வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தமிழக கடற்கரையை ஒட்டி நகர்கிறது. இது காற்றழுத்த மண்டலமாக கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது; பல மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, இன்று காலை 5.30 மணி நிலவரப்படி, இது தமிழகக் கடற்கரையை ஒட்டி நகர்ந்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் வடக்குத் தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர பிரதேச கடற்கரைகளுக்கு அருகே காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும்.
பின்னர், அடுத்த 12 மணி நேரத்தில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசத்துக்கு இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று புயலாக மாறுவதற்கான வாய்ப்பு மிக குறைவாகவே உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.