தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் விலகி உள்ளதை அடுத்து, அந்த மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி கூண்டோடு காலியாக இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் தலைவர் இளையராஜா என்பவர், தனது ஆதரவாளர்களுடன் கட்சியில் இருந்து விலகி உள்ளதாக அறிவித்துள்ளார். "ஏழாண்டு காலமாக அரூர் தொகுதி தலைவராக நாம் தமிழர் கட்சியில் பணியாற்றி உள்ளேன். தற்போது கனத்த இதயத்துடன் நான் கட்சியிலிருந்து விலக முடிவை எடுத்து உள்ளேன்," என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
"தர்மபுரி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியை கூண்டோடு கலைப்பு என்ற செய்தியில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால், நாம் தமிழர் கட்சிக்கு தர்மபுரியில் கூண்டே கிடையாது. நாங்கள் மட்டும்தான் கட்சியின் உறவுகளாக இருந்த நிலையில், நாங்கள் அனைவரும் தற்போது கட்சியில் இருந்து விலகி உள்ளோம்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"சீமானின் கொள்கை கோட்பாடுகளை விரும்பி தான் கட்சியில் இணைந்தோம். ஆனால், எங்களை கொச்சைப்படுத்தும் விதமாக அவர் நடத்தி வருகிறார். தமிழ் தேசியம் என்ற அளவில் அவர் பேசுவது எங்களது கட்டமைப்பை சிதைக்கிறது. எனவே கட்சியில் இருந்து விலகுகிறோம். அடுத்து என்ன செய்வது என்பதை ஆதரவாளர்களுடன் கலந்து பேசி முடிவை தெரிவிப்பேன்," என்றும் இளையராஜா கூறினார்.