Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தயாநிதி மாறன் மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் அறிக்கை

தயாநிதி மாறன் மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் அறிக்கை
, புதன், 22 ஏப்ரல் 2020 (18:57 IST)
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்பி தயாநிதி மாறன் மக்களை பிச்சைக்காரர்கள் என்றும், மாநில அரசும் மத்திய அரசும் பிச்சைக்காரர்களிடம் பிச்சை எடுக்கின்றார்கள் என்றும் கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தயாநிதி மாறன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் தனது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
 
ஓரிரு நாட்களுக்கு முன்‌ பத்திரிக்கையாளருக்கு பேட்டியளித்த திமுக எம்பி தயாநிதி மாறன்‌, பாரதப்‌ பிரதமர்‌ திரு.நரேந்திர மோடி அவர்களையும்‌, தமிழக முதல்வர்‌ திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும்‌, பிச்சைக்காரர்கள்‌ எனப்‌ பேசியிருக்கிறார்‌. தன்னை ஒரு நாகரீக மனிதராகவும்‌ அறிவார்ந்த நபராகவும்‌ காட்டிக்‌ கொள்ள முயற்சி செய்யும்‌ தயாநிதிமாறனின்‌ அடுத்தப்பக்கம்‌ வெளிவந்ததிருப்பதாக நான்‌ கருதுகிறேன்‌.
 
பாரதப்‌ பிரதமர்‌ மோடி அவர்கள்‌ , கொரோனாவுக்கு எதிரான யுத்தம்‌ உலகப்போருக்கு சமமான யுத்தம்‌, இதில்‌ நாம்‌ ஒவ்வொருவரும்‌ வீரர்கள்‌, இணைந்து பணியாற்றுவோம்‌. வாருங்கள்‌ எனக்‌ கூறி வருகிறார்‌. ஆனால்‌, இந்தப்‌ போரில்‌ தன்னை இணைத்துக்‌ கொள்வதற்கு பதிலாக, நடைபெறும்‌ நிவாரணப்‌ பணிகளுக்கு எதிராக, செயல்பட்டிருக்கிறார்‌ தயாநிதிமாறன்‌.
 
அரசுக்கு ஆக்கபூர்வமான விமர்சனங்களை அவர்‌ சொல்லியிருக்கலாம்‌. அரசு நடவடிக்கைகளில்‌ குறைகள்‌ இருந்தால்‌ சுட்டிக்‌ காட்டியிருக்கலாம்‌. நிவாரணப்‌ பணி மேம்பாட்டுக்காக கருத்துக்கள்‌ சொல்லியிருக்கலாம்‌. ஆனால்‌ இவை அனைத்தையும்‌ விட்டுவிட்டு, வெற்று அரசியல்‌ பேசி, தனது அறியாமையையும்‌ அரசியல்‌ வெறித்தனத்தையும்‌ வெளியிட்டுள்ளார்‌ தயாநிதிமாறன்‌. ஓரிரு நாட்கள்‌ கடந்த நிலையில்‌ தனது தவறை உணர்ந்து கொண்டு அவர்‌ வருத்தம்‌ தெரிவிப்பார்‌ என நினைத்திருந்தேன்‌. அது நடக்கவில்லை. பேரிடர்‌ காலங்களில்‌ மாநில அரசும்‌ மத்திய அரசும்‌ நிவாரண நிதி சேகரிப்பது வழக்கமான ஒன்றுதான்‌. இதற்காகவே தான்‌ பிரதமர்‌ நிவாரண நிதி முதல்வர்‌ நிவாரண நிதி ஆகியவை உருவாக்கப்பட்டிருக்கின்றன. தயாநிதி மாறன்‌ இதை அறியாதவராக இருக்க முடியாது.
 
மாநிலத்தில்‌ திமுக ஆட்சி செய்த போது, அண்ணாவுக்குப்‌ பிறகு கருணாநிதியே பல முறை முதல்வராகப்‌ பணியாற்றிய போது, மக்களிடம்‌ நிவாரணம்‌ கோரிய உதாரணங்கள்‌ பற்பல உண்டு. பிச்சைக்காரர்‌ ஒழிப்பு என்பது ஒரு பேரிடர்‌ கிடையாது. ஆனால்‌ அதற்குக்‌ கூட கருணாநிதி நிதி சேகரிததார்‌ என்பதை தயாநிதி மறுக்க முடியுமா? இல்லை, மாவட்டம்தோறும்‌ இலக்கு வைத்து திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ நிதி திரட்டுகிறதே ” அதைத்தான்‌ பிச்சைக்காரத்‌ தினம்‌ என்று தயாநிதி கூறுவாரா? சரி போகட்டும்‌, இனிவரும்‌ நாட்களில்‌ திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ மக்களிடமிருந்து நிதி திரட்டாது என்றாவது தயாநிதி மாறனால்‌ உறுதிமொழி கூற முடியுமா ? இல்லை, இதுவரை தயாநிதியின்‌ இந்தப்‌ பேச்சைக்‌ கண்டிக்காத ஸ்டாலின்தான்‌ இப்படி ஒரு உறுதியை தருவாரா?
 
தான்‌ நாடளுமன்றம்‌ செல்ல வேண்டும்‌ என்பதற்காக, இருகரம்‌ கூப்பி, அம்மா தாயே வாக்களியுங்கள்‌, வாக்களியுங்கள்‌ என்று கோரினாரே, அதென்ன பிச்சையா அல்லது கட்டளையா ?யார்‌ பிச்சைக்காரர்‌ ? இவரா , இவருக்கு வாக்களித்த மக்களா ? இன்றைக்கு அந்த மக்களைப்‌ பார்த்து பிச்சைக்காரர்‌ என்கிறாரே, என்ன அநியாயம்‌ ? அடுத்த முறை இவர்‌ வாக்குப்‌ பிச்சைக்கு வரும்‌ போது, மக்கள்‌ சரியாகப்‌ பாடம்‌ கற்பிப்பார்கள்‌ என நம்புகிறேன்‌.
 
கோட்டு சூட்டு போட்ட தயாநிதிக்கு இந்திய பாரம்பரியம்‌ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தனக்கென வாழாமல்‌ சமுதாயத்திற்காக வாழும்‌ ரிஷிகளும்‌ முனிகளும்‌ பிச்சை எடுப்பது இந்நாட்டில்‌ மேன்மையாகப்‌ பார்க்கப்பட்டது. இந்தவகையில்‌ தனக்கென வாழாமல்‌ சமுதாயத்துக்கென வாழும்‌ பிரதமர்‌ மோடிக்கு சமுதாயத்திடம்‌ நிவாரணம்‌ கோர 100 சதவிகிதம்‌ தகுதி இருக்கிறது. ஆனால்‌ தயாநிதி போன்ற
கொள்ளையடிப்போருக்கு பிச்சை எடுக்கும்‌ தகுதி கூட கிடையாது.
 
இருப்பவரிடமிருந்து இல்லாதவருக்கு வாங்கிக்‌ கொடுக்கும்‌ செயல்‌ ஒரு அறம்‌. கார்ப்பரேட்டுகளுக்குக்‌ கூட சமூக அக்கறை இருக்க வேண்டும்‌ என்பதற்காகத்தான்‌ சி எஸ்‌ ஆர்‌ போன்ற சேவைகள்‌ அறிமுகப்படுத்தப்பட்டன. ஆசியாவின்‌ மிகப்‌ பெரிய பணக்காரக்‌ குடும்பம்‌ நிவாரணத்துக்கு என்ன செய்திருக்கிறது? எண்ணற்ற பெருநிறுவனங்கள்‌ வாரி வழங்கி இருக்கின்றனவே! அது நம்பிக்கை, ஆம்‌, மோடியின்‌ பால்‌ உள்ள நம்பிக்கை. பொது மக்கள்‌ மீதுள்ள அக்கறை. ஆனால்‌ தயாநிதியோ அவரது குடும்பத்தாரோ அல்லது திமுகவோ அரசின்‌ மீதும்‌, பொதுமக்கள்‌ மீதும்‌ என்ன அக்கறை காட்டியுள்ளது ?. கட்சியோ. மாறன்‌ குடும்பமோ என்ன நிதி அளித்திருக்கிறார்கள்‌ ? கொடுக்க மனம்‌ இல்லை என்பதால்‌ தான்‌ நிவாரணப்‌ பணியில்‌ அரசியல்‌ ஆதாயம்‌ தேட முயல்கின்றனர்‌.
 
மக்களின்‌ சொத்தை கட்டப்‌ பஞ்சாயத்து, ரவுடியிசம்‌, ஆட்சி அதிகாரத்தின்‌ மூலம்‌ கொள்ளையடித்த கூட்டம்‌ இவர்கள்‌ கூட்டம்‌. பஞ்ச பூதங்களிலும்‌ கொள்ளை அடித்தவர்கள்‌ இவர்கள்‌. இவர்‌ கூறுகிறார்‌ முதல்வரும்‌ பிரதமரும்‌ பிச்சைக்கார்களாம்‌! மக்களுக்கு நிவாரண உதவி கேட்பதை பிச்சை எடுப்பதாக இவர்கள்‌ பேசுவது ஆணவத்தின்‌ உச்சம்‌.
 
இன்று உலகமே மோடியின்‌ தலைமையிலான பாரதத்‌ திருநாட்டை உலக சஞ்சீவினியாகப்‌ பார்க்கிறது. 108 நாடுகளுக்கு நாம்‌ நோய்‌ தீர்க்கும்‌ மருந்தை அனுப்பி கொடையிற்‌ சிறந்த நாடாக திகழ்கிறோம்‌. கொடையாளியான ஒருவரைப்‌ பார்த்து பிச்சைக்காரன்‌ நீ என வர்ணிக்க முடியும்‌ எனில்‌ அது மன வக்கிரம்‌ தவிர வேறேதும்‌ இல்லை.
 
தயாநிதி மாறன்‌ தனது தவறை உணர்ந்து, அவர்‌ பயன்படுத்திய அநாகரிகமான வார்த்தைகளுக்கு மன்னிப்புக்‌ கேட்க வேண்டும்‌. திரும்பப்‌ பெறுவதற்கான காலகட்டம்‌ முடிந்து விட்டது. திமுக தலைவர்‌ ஸ்டாலின்‌ உடனடியாக இதில்‌ தலையிட்டு, அவரை சரியான முறையில்‌ வழி நடத்த வேண்டும்‌. இனி வரும்‌ நாட்களில்‌ தனது கட்சி தலைவர்கள்‌ இதுபோன்று பொறுப்பற்ற முறையில்‌ பேசுவதை தடுக்க வேண்டும்‌.
 
இவ்வாறு எல்.முருகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்று 33 கொரோனா பாசிட்டிவ்: சுகாதாரத்துறை தகவல்