கடந்த சில வாரங்களாக நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக வதந்திகள் பரவி வந்தது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமித்ஷாவுக்கு தனது டுவிட்டரில் வாழ்த்து கூறியது, மத்திய அரசின் புதிய கல்வித் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது ஆகியவை காரணமாக அவர் பாஜகவில் சேர இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் இந்த தகவல்களை மறுத்து வந்த நடிகை குஷ்பு சமீபத்தில் சென்னையில் நடந்த காங்கிரஸ் கட்சியை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது காங்கிரஸை கடுமையாக சாடினார். ரூபாய் இரண்டு வாங்கிவிட்டு டூவிட் செய்பவர்கள் தான் இவ்வாறு வதந்தியை கிளப்பி வருவதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில் இன்று மதியம் ஒரு மணிக்கு டெல்லியில் ஜேபி நட்டா முன்னிலையில் குஷ்பூ பாஜகவில் இணைய இருப்பதாகவும் இதற்காக அவர் நேற்று சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் சென்றதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
நேற்று விமான நிலையத்தில் செய்தியாளர்கள் குஷ்புவிடம் நீங்கள் பாஜகவில் இணைய போகிறீர்களா? என்ற கேள்விக்கு கருத்து சொல்ல விரும்பவில்லை என்று மட்டும் பதில் அளித்து விட்டு கடந்தார். மேலும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு ட்விட் போட்டு பரபரப்பை கூட்டியுள்ளார். அந்த பதிவில்,
பலர் என்னிடம் ஒரு மாற்றத்தை பார்க்கின்றனர். வயதிற்கு ஏற்ப நமது வளர்ச்சியும் மாற்றமும் இருக்கும். கற்றவை மற்றும் கற்காதவை, உணர்வுகளின் மாற்றம், பிடித்தவை மற்றும் பிடிக்காதவை, எண்ணங்கள் மற்றும் திட்டங்கள் ஆகியவை ஒரு புதிய வடிவத்தைக் கொடுக்கும்.
கனவுகள் புதியவை. லைக்குக்கும் லவ்வுக்கும் வித்தியாசம் இருப்பதை போல, சரிக்கும் தவறுக்கும் வித்தியாசம் இருப்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. மாற்றம் தவிர்க்க முடியாதது என பதிவிட்டுள்ளார்.