Publish Date: Mon, 12 Oct 2020 (07:35 IST)
Updated Date: Mon, 12 Oct 2020 (07:53 IST)
கடந்த சில வாரங்களாக நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக வதந்திகள் பரவி வந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமித்ஷாவுக்கு தனது டுவிட்டரில் வாழ்த்து கூறியது, மத்திய அரசின் புதிய கல்வித் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது ஆகியவை காரணமாக அவர் பாஜகவில் சேர இருப்பதாக கூறப்பட்டது
ஆனால் இந்த தகவல்களை மறுத்து வந்த நடிகை குஷ்பு சமீபத்தில் சென்னையில் நடந்த காங்கிரஸ் கட்சியை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது காங்கிரஸை கடுமையாக சாடினார். ரூபாய் இரண்டு வாங்கிவிட்டு டூவிட் செய்பவர்கள் தான் இவ்வாறு வதந்தியை கிளப்பி வருவதாகவும் அவர் கூறினார்
இந்த நிலையில் இன்று மதியம் ஒரு மணிக்கு டெல்லியில் ஜேபி நட்டா முன்னிலையில் குஷ்பூ பாஜகவில் இணைய இருப்பதாகவும் இதற்காக அவர் நேற்று சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் சென்றதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
நேற்று விமான நிலையத்தில் செய்தியாளர்கள் குஷ்புவிடம் நீங்கள் பாஜகவில் இணைய போகிறீர்களா? என்ற கேள்விக்கு கருத்து சொல்ல விரும்பவில்லை என்று மட்டும் பதில் அளித்து விட்டு விறுவிறுவென சென்றுவிட்டார்
பாஜகவில் இணைய இருப்பதை அவர் நேற்று சென்னை விமான நிலையத்தில் மறுக்கவில்லை என்பதால் அவர் பாஜகவில் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. அது மட்டுமின்றி நேற்று முன்தினம் அவர் தனது டுவிட்டரில் ’என்னிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று ஒரு டுவிட்டை பதிவு செய்து அதில் காவி உடையும் அணிந்த புகைப்படத்தை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது