கட்சியில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு இளைஞரணி செயலாளர் உதயநிதிதான் காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளார் கு க செல்வம்.
சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் அவர்கள் கிட்டத்தட்ட பாஜகவில் இணைந்து விட்டதாகவே கருதப்படுகிறது. இன்று பாஜகவின் தலைமை அலுவலகத்துக்கு சென்ற அவர் ஸ்டாலின் குறித்து சில குற்றச்சாட்டுகளை கூறியதும் பாஜக தலைவர்கள் அவருக்கு பொன்னாடை போர்த்தியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கு.க.செல்வம் எம்.எல்.ஏ அதிகாரபூர்வமாக பாஜகவில் சேர்ந்ததாக செய்தி வெளியாகவில்லை என்றாலும் பாஜகவின் ஒரு அங்கமாகவே அவர் மாறிவிட்டதாக கருதப்படுகிறது. இதனை அடுத்தே திமுகவில் இருந்து அவர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுவதாக நேற்று திமுக தலைமை அறிவித்தது. இந்நிலையில் இன்று நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் கு க செல்வம். அப்போது ‘திமுக இருமுறை தோற்ற ஆயிரம் விளக்கு தொகுதியில் நான் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றேன், மீண்டும் போட்டி இட்டாலும் நான் வெற்றி பெறுவேன். என்னைக் கட்சியில் இருந்து நீக்கியது ஜனநாயக படுகொலை. இன்னும் பலர் கட்சியில் இருந்து விலகுவார்கள். என்னுடைய பிரச்னைக்கு உதயநிதி தலையீடுதான் காரணம்’ எனக் கூறியுள்ளார்.