Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகாராஷ்டிரா நிலவரம்: மதச்சார்பற்ற சக்திகளுக்கு கிடைத்த வெற்றி என கே.எஸ்.அழகிரி அறிக்கை

மகாராஷ்டிரா நிலவரம்: மதச்சார்பற்ற சக்திகளுக்கு கிடைத்த வெற்றி என கே.எஸ்.அழகிரி அறிக்கை
, புதன், 13 நவம்பர் 2019 (09:15 IST)
இந்தியாவின் பொருளாதார தலைநகரமாக கருதப்படுகிற மகாராஷ்டிராவில் பாஜகவின் ஆட்சி அகற்றப்பட்டது மதச்சார்பற்ற சக்திகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலையான ஆட்சி அமைந்திட அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரசும் மேற்கொண்டு வருகின்றன என தமிஅக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கையில் அவர் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி குறித்தும் விரிவாக தெரிவித்துள்ளார். இதோ அறிக்கையின் முழு விபரம்:
 
இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துக் கொண்டிருப்பதால் மிகப் பெரிய அளவில் மக்களை பாதித்து வருகிறது. தொழில் வளர்ச்சி கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி 1.1 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த ஏழு ஆண்டுகளில் மிகக் குறைவான அளவாகும். உற்பத்தி வளர்ச்சி விகிதம் அக்டோபர் 2014 ஆம் ஆண்டு முதல் மிகமிக குறைவாக மைனஸ் 1.2 சதவீதமாக இருக்கிறது.
 
முக்கிய துறைகளின் வளர்ச்சி நான்கு ஆண்டுகளிலேயே மிகவும் குறைவாக இருப்பது பல்வேறு பாதிப்புகளை உருவாக்கி வருகிறது. ஏற்றுமதி கடுமையாக சரிந்து விட்டது. மூலதனப் பொருட்களின் வளர்ச்சி மைனஸ் 21 சதவீதமாகக் குறைந்து விட்டது. பயணிகள் வாகன விற்பனை 23.7 சதவீதம் குறைந்துள்ளது.
 
கடந்த செப்டம்பர் மாதத்தில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி 4.3 சதவீதமாக குறைந்திருக்கிறது. இது கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத பின்னடைவாகும். சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வளர்ச்சி 4.6 சதவீதமாக இருந்தது. தொழில் துறை உற்பத்திக் குறியீடு என்பது இந்தியாவின் பொருளாதார குறியீடாகக் கருதப்படுவதாகும். சுரங்கம், மின்சாரம் மற்ற உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சியை இது படம் பிடித்துக் காட்டுகிறது.
 
நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலியப் பொருட்கள், உரம், உருக்கு, சிமெண்ட் மற்றும் மின்சாரம் ஆகியவை நாட்;டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக ஆதாரமாக விளங்கும் 8 உள்கட்டமைப்புத் துறைகளாகும். தொழில் துறை வளர்ச்சியை கணக்கிடுவதில் இந்தத் துறைகளின் பங்கு 40 சதவீதமாக இருக்கிறது.
 
கடந்த 52 மாதங்களில் இல்லாத பின்னடைவாக இந்த 8 முக்கியத் துறைகளின் உற்பத்தி 5.2 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் தொழில் துறை உற்பத்தி கடுமையான பாதிப்பை அடைந்துள்ளது. இதனால் தான் தொழில் துறையின் உற்பத்தி 4.3 சதவீதமாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியை கணக்கிடுவதில் உற்பத்தித் துறையின் பங்கு 78 சதவீதமாகும்.
 
செப்டம்பர் மாதத்தில் தொழில் துறை உற்பத்தி 8 ஆண்டுகளில் இல்லாத பின்னடைவை சந்தித்துள்ளது. இத்தகைய பொருளாதாரப் பின்னடைவு காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஆனால், மத்திய பாஜக அரசு இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாமல் இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
 
காஷ்மீர் மாநிலத்திற்கு அரசமைப்பு சட்ட விதி 370-ன் மூலம் வழங்கப்பட்டு வந்த சிறப்பு தகுதியை நீக்கம் செய்ததில் காட்டிய அக்கறையை, பொருளாதார தேக்க நிலையை சரி செய்வதில் ஏன் காட்டவில்லை ? அதேபோல, மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி வாக்கு வங்கி அரசியலின் மூலம் வெற்றிகளை பெற்று விடலாம் என்ற பாஜகவின் அரசியலுக்கு சமீபத்தில் நடந்த மகாராஷ்டிரா, ஹரியானா சட்டமன்றத் தேர்தல்கள் கடும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றன.
 
இந்தியாவின் பொருளாதார தலைநகரமாக கருதப்படுகிற மகாராஷ்டிராவில் பாஜகவின் ஆட்சி அகற்றப்பட்டது மதச்சார்பற்ற சக்திகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலையான ஆட்சி அமைந்திட அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரசும் மேற்கொண்டு வருகின்றன.
 
நாடு முழுவதும் நிலவி வருகிற பொருளாதார தேக்க நிலையை கண்டித்து பல்வேறு நிலைகளில் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால், மத்திய பாஜக அரசு இதுகுறித்து பொருளாதார வல்லுநர்களோடு கலந்து பேசி பொருளாதார தேக்க நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்”.
 
இவ்வாறு கே.எஸ்.அழகிரி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாக்குப்பையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி – காதலுக்காக தாய் செய்த கொடூரம் !