கோயம்பேடு மார்க்கெட் பதிலாக திருமழிசை பகுதியில் காய்கறி மார்கெட் செயல்பட உள்ளது அதற்கான பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 527 பேர் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. ஒரே வாரத்தில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கிட்டத்தட்ட இரு மடங்காகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டவர்கள் பெரும்பாலானோர் கோயம்பேடு மார்க்கெட்டில் தொடர்புள்ளவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியை மக்கள் பின்பற்றாததால் உடனடியாக அந்த மார்க்கெட்டை மூட வேண்டும் என்று கடந்த சில நாட்களாக கோரிக்கை எழுந்து வருகிறது.
இதனை அடுத்து கோயம்பேடு மார்க்கெட் மூடப்படுவதாகவும், அதற்கு பதிலாக திருமழிசை பகுதியில் காய்கறி மார்கெட் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி திருமழிசையில் குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான 100 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட இந்த பகுதியில் கடைகள் வரும் என தெரிகிறது.
அந்த பகுதியில் இருக்கக்கூடிய முட்கள் மற்றும் புட்கள் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு நிலங்கள் சம படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக 100 கடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு கடையும் 200 சதுர அடியில் அமைக்கப்படுகிறது, மேலும் ஒரு கடைக்கும் மற்றொரு கடைக்கும் இடையே 5 அடி இடைவெளி விடப்படுகிறது. இந்த பணி நாளை இரவுக்குள் முடியும், வருகின்ற 7 ஆம் தேதி காலை சந்தை இங்கே செயல்படும் என்று தெரிகிறது.