சென்னை அருகே கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தை ஒட்டி அமைக்கப்பட்டு வரும் ரயில் நிலையம், வரும் ஜனவரி மாதம் முதல் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வேயின் கூடுதல் பொது மேலாளர் மகேஷ் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது, "கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தின் பணிகள் தற்போது 80 சதவீதம் முடிவடைந்துள்ளன. நடைமேடையின் மேற்கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து பணிகளும் நிறைவடைந்து, வரும் ஜனவரி மாதத்தில் இந்த நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்," என்று உறுதிப்படுத்தினார்.
சென்னைக் கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில், வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அருகில் இந்த ரயில் நிலையம் சுமார் ஓராண்டுக்கும் மேலாக கட்டப்பட்டு வருகிறது. 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்கள் வந்து செல்லும் வகையில், இங்கு மூன்று நடைமேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
முன்னதாக, கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வசதியாக மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், ரயில் நிலையம் செயல்பாட்டுக்கு வரும்போது, இது தென்மாவட்டங்கள் செல்லும் பயணிகளுக்கு பெரும் வசதியாக அமையும்.