ஸ்டாலின் மிசா அவசர சட்டத்தில் கைது செய்யப்படவில்லை என்று கிளம்பியிருக்கும் சர்ச்சைக்கு விளக்கம் அளிக்கும் விதமாக கி வீரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
சமீபத்தில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி அளித்த ஒரு நேர்காணலில் ஸ்டாலின் மிசா கைதி அல்ல என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதையடுத்து சமூகவலைதளங்களில் இது தொடர்பான விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. ஒருசாரார் ஸ்டாலினுக்கு ஆதரவாகவும் மறுதரப்பினர் அவருக்கு எதிராகவும் விவாதித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக திக தலைவர் கி வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘திமுக தலைவர் ஸ்டாலின் 1976இல் ‘மிசா'வில் கைது செய்யப்பட்டு, சிறைக்கு அழைத்து வரும்போதே அவரை அடித்துக்காயப்படுத்தி, இரவு 10 மணிக்கு மேல் 1976 பிப்ரவரி முதல் வாரத்தில், அநேகமாக பிப்ரவரி 3 அல்லது 4ஆம் தேதி இருக்கும் எனது அறையில் அவர் தள்ளப்பட்டார். அப்போது, அவர் என் மீதுதான் வந்து விழுந்தார். அவருக்கு ஆறுதல் கூறி, ரத்தம் வழிவதைத் துடைத்தவன் நான் என்பது ஆதாரபூர்வமான வரலாறு. பிறகு அவரை சிட்டிபாபு அறையில் மாற்றினர். சிட்டிபாபுவும், மற்றவர்களும் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டனர். சுமார் ஓராண்டு ‘மிசா' கைதியாகவிருந்த ஸ்டாலினும், நாங்களும் மற்ற ‘மிசா' கைதிகளும் விடுதலை செய்யப்பட்டோம். இதுதான் வரலாறு.
சென்னை மத்திய சிறையில் 1976 பிப்ரவரி முதல் 1977 பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில், அரசியல் கைதிகளைக் கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட இஸ்மாயில் தலைமையிலான விசாரணைக் கமிஷனின் அறிக்கையை (303 பக்கங்கள்) தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில், 29ஆம் பக்கத்தில் இறந்த முன்னாள் மேயரும், எம்.பி.யுமான சிட்டிபாபு எழுதிய டைரியில் உள்ளதையும் ஜஸ்டீஸ் எம்.எம்.இஸ்மாயில் பதிவு செய்துள்ளார்.’ என தெரிவித்துள்ளார்.