Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு… கி வீரமணி அறிக்கை!

இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு… கி வீரமணி அறிக்கை!
, புதன், 27 அக்டோபர் 2021 (11:08 IST)
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இது சம்மந்தமாக திராவிடர் கழக தலைவர் கி வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், நமது பள்ளிக் கல்வித் துறை  தெரிந்தோ, தெரியாமலோ 'பழைய கள் புதிய மொந்தை' என்பதுபோல் பல தனித்தனி அம்சங்களை நடைமுறைப்படுத்துவது போன்ற சில ஆணைகளைப் பிறப்பித்திருப்பது மிகுந்த வேதனையைத் தருவதாக உள்ளது. அதிர்ச்சியாகவும் உள்ளது.

‘‘இல்லம் தேடி கல்வித் திட்டத்தின்படி ஒன்று முதல் 5 ஆம் வகுப்புகளுக்குப் பாடம் கற்பிக்க, பிளஸ் டூ படித்தவர்களையும், 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஏதாவது ஒரு பட்டம் பெற்றவர்களைப் பயன்படுத்தலாம்'' என்று கூறியிருப்பது, யாரும் இதனைப் பயன்படுத்தி நுழைந்து, பிஞ்சுகளுக்குப் பாடம் என்ற பெயரில், மத நஞ்சுகளைக்கூட விளைவிக்கவே இந்த சர்க்கரைப் பூச்சுள்ள விஷ (ஆர்.எஸ்.எஸ்.) உருண்டை என்றே கூறி முன்பே எதிர்த்தோம்.

அதற்குத் தமிழ்நாடு கல்வித் துறை தலையாட்டலாமா? ஏற்கெனவே, நவீன குலக்கல்வித் திட்டமான ஒன்றிய அரசின் புதிய கல்வித் திட்டத்தை நிராகரித்த தமிழ்நாடு அரசு, அதற்கு மாற்றாக தமிழ்நாடு கல்விக் கொள்கையை உருவாக்க ஓர் உயர்நிலை வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப் பட்டுள்ளது. அந்த நிபுணர் குழு விரைவில் அமைக்கப்பட்டு, அதற்கு குறிப்பிட்ட கால அளவீடும் கூட நிர்ணயித்து, அதன் பிறகே பரிந்துரைகளை செயல்படுத்தலாம்.

கல்வித் திட்டம் நமது பிள்ளைகள் வருங்கால வளர்ச்சித் திட்டம் என்பதால், இதில் அவசரக்கோலம்; அள்ளித் தெளித்த நிலை தவிர்க்கப்படுதல் அவசியம். கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் திரும்பக் கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் தயக்கமில்லாமல் செய்வது ஒரு தொலைநோக்கு என்றாலும், கருணாநிதி கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டத்தைப் போன்று, மாநிலத்தின் கல்வி இன்னமும் ஒத்திசைவுப் பட்டியலில்தான் (கன்கரண்ட் லிஸ்ட்) இருக்கிறதே தவிர, ஒன்றிய அரசின் பட்டியலாகி விடவில்லை.

ஆனால், பா.ஜ.க. அரசு இந்தக் கல்வித் திட்டங்கள், மருத்துவ விவசாய கூட்டுறவு சட்டங்கள்மூலம் நாளும் செய்வது யதார்த்தத்தில் மாநில உரிமைகளைப் பறித்து விடுவதாக உள்ளது!ன்இதில் முதல் பலி, கல்வி, மருத்துவம்; எதில் ‘திராவிட மாடல்' ஆட்சி சாதனை சரித்திரம் படைத்ததோ, அதனைக் குறி வைக்கும் நிலை. எனவே, உடனடியாக இதுபற்றி தமிழ்நாடு அரசும், நமது முதலமைச்சரும் உரிய அவசர நடவடிக்கைகளை எடுத்து, தமிழ்நாட்டு மாணவர்களை - கல்வியால் அவர் களது எதிர்காலம் ஒளிமயமாக்கிட அத்துணை முயற்சி களிலும் ஈடுபடவேண்டியது அவசர அவசியமாகும்” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கள்ளக்குறிச்சி பட்டாசு கடை தீ விபத்து; பலி எண்ணிக்கை உயர்வு!