Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ் வேறு… திராவிடம் வேறா ? – கீழடிப் பிரச்சனையை ஒட்டி கவிஞர் மகுடேஸ்வரன் விளக்கம் !

Advertiesment
தமிழ் வேறு… திராவிடம் வேறா ? –  கீழடிப் பிரச்சனையை ஒட்டி கவிஞர் மகுடேஸ்வரன் விளக்கம் !
, புதன், 25 செப்டம்பர் 2019 (10:44 IST)
கீழடி அகழ்வாராய்ச்சியை முன்வைத்து தமிழ் வேறு திராவிடம் வேறு என எழுந்துள்ள சலசலப்புகளுக்குப் பதிலளிக்கும் விதமாக கவிஞர் மகுடேஸ்வரன் தனது முகநூலில் ஒரு பதிவினை எழுதியுள்ளார்.

மதுரையில் வைகை நதிக்கரையில் அமைந்துள்ள கீழடி கிராமத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் முடிவுகளை தமிழக அரசு ஆதாரங்களோடு வெளியிட்டுள்ளது. இந்த முடிவுகள்  மூலம் 2600 ஆண்டுகளுக்கு முன்பே மதம் மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாமல், படிப்பறிவு பெற்றவர்களாக வாழ்ந்துவந்த பழங்கால தமிழர்களின், சங்க கால நாகரிகத்திற்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்நிலையில் இந்த முடிவுகளை வைத்து தமிழ் வேறு, திராவிடம் வேறு என தமிழ் தேசியவாதிகளுக்கும் திராவிட சிந்தனையாளர்களுக்குள்ளும் இடையில் கருத்து மோதல்கள் எழுந்துள்ளன. இது சம்மந்தமாக முகநூலில் கூட விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த விவாதங்களுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக கவிஞர் மகுடேஸ்வரன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு பதிவினை எழுதியுள்ளார். அவர் பதிவு பின் வருமாறு :-

திராவிடம் வேறு, தமிழ் வேறு என்று ஒரு வழக்கு கடுமையாக நடந்துகொண்டிருக்கிறது. திராவிடம் என்ற சொல் பழைய தமிழ்நூல்களில் இல்லை என்போர் ஒரு தரப்பினர். தமிழ் என்ற சொல்லும்கூட முன்னைப்பழம் நூல்களில் அரிதிற்காணக்கூடிய நிலையில்தான் இருக்கிறது.

இவ்விரண்டு சொற்களும் ஒன்றா, வெவ்வேறா என்று அறிதல் கட்டாயம். அமிழ்து என்பதனை மும்முறை அடுக்கினால் அமிழ்தமிழ்தமிழ்து என்றாகும். பண் இனிமை கருதி நம் மொழிக்குத் தமிழ் என்ற பெயர் வழங்கப்படலாயிற்று என்று கொள்வது பொருத்தம்.

தமிழ் என்கின்ற சொல் எவ்வாறெல்லாம் ஆகும் என்று பார்க்க வேண்டும். ‘ழ’ என்ற ஒலிப்பு எல்லார்க்கும் இயல்வதில்லை. பிறமொழியினர்க்கு இது கடினமாகவே இருக்கும். இந்த ழகரம் தமிழ்ச் சொற்களிலேயே தனக்கு மாற்றாக டகரத்தைக் கொண்டுவரும்.

குழல் என்ற சொல்லை எடுத்துக்கொள்ளுங்கள். நடுவில் உள்ளீடற்று இருக்கும் ஒரு பொருளே குழல் எனப்படுவது. அச்சொல்லிலுள்ள ழ என்ற எழுத்து டகரத்தைப் பெற்றுக்கொள்ளும். இப்போது குழல் என்ற சொல் குடல் என்று ஆகிவிடும். குடல் என்ற சொல்லின் பொருளும் அதுதான். நம் உடலில் நடுவழித்துளை அமைந்த உறுப்பு குடல் என்று அறியப்படுகிறது. குழல் என்பதே குடல் ஆகியது.

புழல் என்ற சொல்லுக்கும் உள்துளை அமையப்பட்ட பொருள் என்பதே விளக்கம். புழல் என்பதே புடல் என்றாகியது. புடலை என்று ஒரு காய்க்குப் பெயர். புடலங்காயின் உட்புறம் உள்ளீடற்று இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

குழல் குடல் ஆகும்.
புழல் புடல் ஆகும்.
ழ என்னும் எழுத்து ட ஆகும்.
(அவ்வாறு ஒலிக்கப்படும்)

வகரம் மகரம் ஆவதை நாம் பேச்சு மொழியிலேயே காணலாம். வானம் மானம் என்று சொல்லப்படுகிறது. அவ்வாறே மகரம் வகரம் ஆவதுமுண்டு. செம்மை என்பது செவ்வை ஆகும். மீசை என்பது வீசை ஆகும். வீசை என்ற சொல்லின் பொருளை அகராதியில் பாருங்கள். வீசை = மீசை என்றே காணப்படும். இவ்விளக்கங்கள் யாவும் நான் சொல்வதன்று. நூற்றாண்டுக்கு முன்னம் தமிழின் முதல் மொழிநூலை இயற்றிய மாகறல் கார்த்திகேய முதலியாரும் அவ்வாறே சொல்கிறார். மேற்சொன்ன இயல்புகளின்படி, தமிழ் என்பது தமிழம் என்று நிற்கையில் எவ்வாறு மாறும் ?
மி = வி
ழ = ட
மிழ = விட
மிழ என்பது விட என்று நிற்கும்.

த என்ற ஒலிப்பு பிறமொழியில் த்ர என்று ஆகும். பிறமொழி இயல்புகள் அவ்வாறு உள்ளன. தேகம் என்ற சொல் வடமொழியில் திரேகம் என்று ஆவது நல்ல எடுத்துக்காட்டு.
இப்போது மேற்சொன்னவற்றைத் தொகுத்துப் பாருங்கள்.
தமிழ = த்ரவிட

த்ரவிட என்பதனைத் தற்பவமாக்கித் திராவிட என்கிறோம். தமிழ் என்ற சொல்தான் திராவிடம் என்ற சொல்லின் வேர்.
தமிழ் = தமிழம் = த்ரவிடம் = திராவிடம்.

களத்திலுள்ள அரசியல் முரண்களைக் களங்கண்டே தீர்க. சொற்கள் அவற்றுக்குரிய தகைமைகளோடு எஞ்ஞான்றும் வாழும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளசு டூ பெருசு; ஒரே ரீசார்ஜில் மொத்தமாய் கொக்கி போட்ட ஏர்டெல்!