கரூரில் கூட்டநெரிசலில் 41 பேர் பலியான விவகாரம் குறித்து விசாரிக்க NDA அனுப்பியுள்ள எம்.பிக்கள் குழு கோவை வந்தடைந்தனர்.
கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தனிநபர் விசாரணைக்கு அருணா ஜெகதீசனை நியமித்துள்ளார்.
இந்த உயிரிழப்பு விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பிக்கள் குழுவை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆலோசனையின் பேரில் அமைத்துள்ளனர். பிரபல நடிகையும், எம்பியுமான ஹேமமாலினி தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் எம்.பிக்கள் அனுராக் தாகுர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே, அப்ரதிதா சாரங்கி, ரேகா சர்மா, புட்டா மகேஷ் குமார் ஆகியோரும் உள்ளனர்.
இந்த குழுவினர் இன்று கோவை விமான நிலையத்தை வந்தடைந்தனர். அங்கிருந்து காரில் கரூர் செல்லும் அவர்கள், அசம்பாவிதம் நடந்தது குறித்து பொதுமக்களின் கருத்துகளை கேட்க உள்ளனர். மேலும் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களிடமும் தனித்தனியாக பேச உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Edit by Prasanth.K