உலகின் மிகப்பெரிய ஜனநாயகநாடான இந்தியாவில் தொண்ணூறு அகவைகள் கடந்தும் செயல் மிகு அரசியல் செய்து வருபவர் களில் ஒருவர் கலைஞர் கருணாநிதி. வைரவிழா நாயகன். காலத்தின் கோலம் சரித்திர நாயகனை காலம் பீஷ்மர் முள் படுக்கையில் வைத்து இருக்கிறது. களம் காணாத அவர் பாதங்கள், கட்டளை இடாத அவர் இதயம், எனது உயிரிலும் மேலான என் அன்பு உடன் பிறப்புகளே ! என்று சொல்லாத அவர் உதடுகள், இவை எல்லாம் காலத்தின் கொடுமைகளே.
ஜல்லிக்கட்டுப் போராட்டம் நீட் தேர்வுப் போராட்டம், மாட்டிறைச்சி தடை சட்டப் போராட்டம் இந்த களங்கள் எல்லாம் கலைஞருக்கான களங்களே ! யார் யாரோ பேசினார்கள் ! பேசி க் கொண்டிருக்கிறார்கள் ! ஆனால் களம் தன் தலைமகனுக்காக காத்திருந்தது தனி க் கதை.
நெகடிவ் டு பாசிட்டிவ்
அவர் செல்வ சீமான் வீட்டு இளவரசர் அல்ல, பெரும் நிலக்கிழார் வாரிசும் அல்ல, பொலிவான முக அம்சம் கொண்டவரும் அல்ல, நுனி நாக்கு ஆங்கிலம் உடையவரும் அல்ல. பெரிய சாதிய பின்புலம் உடையவரும் அல்ல. தன் நெகடிவ் அனைத்தையும் நெகடிவ் * நெகடிவ் = பாசிட்டிவ் ஆக மாற்ற கூடிய கலையை கற்று தேர்ந்தவர் .
சோர்விலன்
அதிகாலை நடைபயணம் ,யோகா, உடன் பிறப்புகளுக்கு கடிதம் எழுதுவது ,தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு பதில் எழுதுவது ,கட்சி மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என தன்னை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருப்பதே கலைஞரின் அடையாளம் . முதுமையையோ ,உடல் சுகவீனத்தையோ காரணம் காட்டி தனது செயல்களில் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாத ஓய்வறியா சூரியன்.
சட்டசபையில் அப்போதைய முதலைமைச்சர் விவாதத்தின் போது "சூரியன் அஸ்தமனம் ஆகி விட்டது, அஸ்தமனமான சூரியன் மீண்டும் உதிக்காது " என்று தாக்கி பேசுகிறார் .அதற்கு கலைஞர்," காலையில் எழுந்து கிழக்கு நோக்கி பார்க்க சொல்லுங்கள். அது மீண்டும் உதிக்கும்" என்று பதில் தருகிறார்.
போர்குணம்
மறைந்த பாரத பிரதமர் இந்திரா காந்தி தனது சகாக்களிடம் கருணாநிதியை பற்றி பேசும் போது , கருணாநிதி ஒருவரை ஆதரிக்கும் போது தீவிரமாக ஆதரிப்பார் , அதே வேளையில் எதிர்க்கும் போது தீவிரமாக எதிர்ப்பார் என்றாராம் .கலைஞரின் போர் குணத்திற்கு அவரே தலைமை தாங்கி களம் கண்ட அரசியல் போராட்டங்களே சாட்சி. திராவிட இயக்க சித்தாந்தங்களுக்கு கலைஞர் தனது போர்க் குணம் கொண்டு செயல் வடிவம் தந்தார் என்றால் மிகையாகாது .டால்மியாபுரம் போராட்டம் தொடங்கி செம்பரபாக்கம் ஏரி திறப்பு தொடர்பான போராட்டங்கள் வரை ,கலைஞரின் போர் குணத்தின் வெளிப்பாடே.
தவிர்க்க முடியாதவராய் இருப்பவர்.
அறுபது ஆண்டு கால அரசியல் வாழ்வில் பன்னிரண்டு சட்டமன்றங்களை கண்ட மூத்த உறுப்பினர். இன்றைய தமிழக அரசியல் விவாதங்கள் அனைத்திலும் பேசப் படுபவராய் இருப்பவர் கலைஞர். ஒவ்வொரு விவாதத்தின் போதும் , கலைஞரின் தோளுக்கு புகழ் மாலை சூட்ட படும் அல்லது முள் கிரீடம் சூட்ட படும்.இரண்டையும் ஒன்றாக பாவிப்பதே கலைஞரின் இயல்பு.
தமிழகத்தில் திராவிட இயக்க சித்தாதங்களின் வெளிப்பாடே சீர் திருத்தங்கள் .இந்த சீர்திருத்தங்களை முன் எடுத்து செல்ல சட்டங்கள் தேவைப்பட்டன .கலைஞர் திட்டங்களையும் கொள்கைகளையும் செயல் வடிவம் ஆக்கிய மிகச் சிறந்த செயல் அலுவலர் .பெண்களுக்கான சொத்து உரிமை சட்டம் ,சமச் சீர் கல்வி, மகளிர் காவல் நிலையம்,கைவண்டி ரிக்க்ஷா ஒழிப்பு,தமிழை அலுவலக மொழியாக்கல் ,சமத்துவபுரம்,அரசு விழா க்களில் தமிழ் தாய் வாழ்த்து ,சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் கோடி ஏற்றும் உரிமை என பல சட்ட மற்றும் திட்ட செயல் வடிவின் முன்னோடி கலைஞர் .
தம்பிகளை உடையோன்
யானையின் பலம் தும்பிக்கை .கலைஞரின் பலம் தம்பிமார்கள் எனும் உடன்பிறப்புகள். கலைஞர் தன உடன்பிறப்புகளுக்கு முரசொலியில் எழுதும் கடிதங்கள் எல்லாம் இலக்கியங்கள் .சமீபத்தில் திருவாரூரில் நலத் திட்டங்களை தொடங்கி வைத்து பேசும் போது "எனது உயிரிலும் மேலான அன்பு உடன் பிறப்புகளே " என்று சொன்னவுடன் எழுந்த கரவொலிகள் இதற்கு .சான்று .தம்பி உடையோன் படைக்கு அஞ்சான் .அற்ப காரணங்களுக்காக அருகில் உள்ளவர்களிடம் பேசாமல் வாழும் நபர்களுக்கு மத்தியில் லட்சோப லட்ச வேறு வேறு தாய் வயிற்றில் பிறந்த அனைவரையும் ஒரு தாய் பிள்ளைகள் ஆக்கியவர் கலைஞர்.
தேவலோக தட்சன்
ஷாஜஹான் காலம் முகாலய கட்டிட கலையின் பொற்காலம் .கலைஞரின் ஆட்சி திராவிட கலைகளின் பொற் காலம். வள்ளுவர் கோட்டம் ,138 அடி வள்ளுவர் சிலை,புதிய தலைமை செயலகம் ,சென்னையில் பல மேம்பாலங்கள்.,அண்ணா நூற்றாண்டு நூலகம் இவை அனைத்தும் கலைஞர் ஓர் தேவலோக தட்சன் என்பதை நமக்கு சொல்லி கொண்டே இருக்கின்றன .வாழும் காலத்தில் நம்மை மற்றவர் பேச குறைந்த பட்சம் நிழல் தரும் ஓர் மரத்தையாவது நட வேண்டும். கலைஞர் எனும் கருத்து ப் பேழை நாம் வாழும் காலங்களிலே நமக்கு காலம் தந்த பரிசு.
இன்றைய தலைமுறையினர் கலைஞரிடம் இருந்து உழைப்பையும் ,நாவன்மையையும் ,தனித்தன்மையையும் செயல் ஆக்கும் தன்மையும் ,கூட்டு மனப்பான்மையையும் , பாசிட்டிவ் எனர்ஜியையும், எப்போதும் உறவுகளின் தொடர்பில் இருப்பதும் ஆன பண்புகளை பெற வேண்டும்