காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி வேறு கட்சியில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியடைந்தது. தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகினார். அதுமுதலாக காங்கிரஸில் பல குழப்பங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் 23பேர் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தியை வெளிப்படுத்தினர். அதில் கபில் சிபலும் ஒருவர்.
கடந்த சில நாட்களாக மாநில அளவில் காங்கிரஸ் கட்சியில் உள்ள முக்கியஸ்தர்கள் பதவி விலகி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது காங்கிரஸில் இருந்து பதவி விலகியுள்ள கபில் சிபல் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினருக்காக நடைபெறும் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிடுகிறார் கபில் சிபல். காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவர் கட்சியிலிருந்து திடீரென விலகியுள்ளது கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.