கன்னியாக்குமரியில் பப்ஜி விளையாட ரீசார்ஜ் செய்ய பணம் தராததால் ஆத்திரமடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ராஜமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ஆண்டனி டேனியல். இவரது மகன் ஆன்றோ பெர்லின் அதே பகுதியில் ஐடிஐ ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். ஊரடங்கால் வீட்டில் உள்ள ஆன்றோ பெர்லின் பப்ஜி விளையாடுவதில் மும்முரமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் செல்போனில் டேட்டா ப்ளான் முடிவடைந்ததால் ஆன்றோவால் பப்ஜி விளையாட முடியாமல் போக, ரீசார்ஜ் செய்ய தனது தாயாரிடம் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தராததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆன்றோ தாயாரை தலையில் தாக்கி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். அதற்கு பிறகு நீண்ட நேரமாகியும் ஆன்றோ வீடு திரும்பாததால் இதுகுறித்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் தென் தாமரைக்குளம் கடற்கரை பகுதியில் ஆன்றோவின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில், ஆன்றோ பப்ஜி விளையாட முடியாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் கன்னியாக்குமரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.