Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உயிரிழந்த கன்னையா குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் தானா? ஒரு கோடி கொடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்

Advertiesment
ramadoss
, திங்கள், 9 மே 2022 (16:33 IST)
சென்னையில் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்ணையா என்ற முதியவர் தீக்குளித்து உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்திற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 10 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டுள்ளார். இதனை கண்டித்து ராமதாஸ் தனது வாழ்க்கையையே இழந்த கன்னையாவின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
 ''சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வீடுகள் இடிக்கப்படுவதைக் கண்டித்து தீக்குளித்த பாமக மாவட்ட துணை செயலாளர் கண்ணையா மருத்துவம் பயனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பாமகவினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கோவிந்தசாமி நகரில் வாழும் மக்கள் கோடீஸ்வரர்கள் அல்ல... கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்துபவர்கள் தான். அவர்கள் அங்கு பல பத்தாண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களை இப்போது திடீரென அங்கிருந்து வெளியேறச் செல்வதும், அவர்களின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்குவதுவதும் மனிதநேயமற்ற செயல்களாகும். அப்பாவி மக்களின் வீடுகள் இடிக்கப் படுவதைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் கண்ணையா தீக்குளித்து வீரச்சாவு அடைந்துள்ள நிலையில், அதைக்கூட பொருட்படுத்தாமல் அங்கு வீடுகளை இடிக்கும் பணியில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் ஈடுபவதும், மக்களை மிரட்டுவதும் கண்டிக்கத்தக்கவை.
 
பூர்வகுடி மக்களை அவர்கள் வாழும் பகுதியில் இருந்து அகற்றுவதை விட கொடிய தண்டனை எதுவும் இல்லை. அங்குள்ள மக்களுக்கு பெரும்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளின் ஏழாவது மாடியில் இடம் ஒதுக்கித் தருவதாக அரசுத் தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மீன்களை பாலைவனத்தில் கிடத்தி மகிழ்ச்சியாக வாழச் சொல்வதற்கு இணையான கொடுமை இதுவாகும். அவர்கள் காலம் காலமாக வாழும் பகுதியைச் சுற்றித் தான் அவர்கள் தங்களுக்கான வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்; அவர்களை அவர்களுக்கு சற்றும் பொருத்தமில்லாத பகுதியில் குடியமர்த்தினால் அவர்கள் வாழ்வாதாரம் இல்லாமல் தவிப்பார்கள். வீடுகள் இடிப்பைக் கண்டித்து கண்ணையா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் என்றால், மறுகுடியமர்வு செய்யப்படுவோர் வாழ்வாதாரம் இல்லாமல் நடைபிணமாகவே வாழ்வார்கள். இப்படி ஒரு நிலையை அரசு ஏற்படுத்தக்கூடாது.
 
 
நீதிமன்ற ஆணைப்படி தான் வீடுகள் இடிக்கப்படுவதாக அரசுத் தரப்பில் கூறப்படுவதை ஏற்க முடியாது. நீர் நிலைகளை ஆக்கிரமிக்கக்கூடாது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், சென்னையில் ஏராளமான நீர்நிலைகளும், பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களும் பணம் படைத்தவர்களாலும், பெரு நிறுவனங்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை அகற்றுவதில் தீவிரம் காட்டாத தமிழக அரசு, எதிர்த்துப் பேச வலிமை இல்லாத மக்களின் வீடுகளை இடித்து வீரம் காட்டுவது நியாயம் அல்ல. கோவிந்தசாமி நகரில் வீடுகளை இடிக்க வேண்டும் என்பதில் எந்த பொதுநலனும் இல்லை. அவற்றை இடிக்க வேண்டும் என்று பொதுநல வழக்குத் தொடர்ந்தது பொதுநலனில் அக்கறை கொண்டவர்கள் அல்ல... மாறாக தனியார் கட்டுமான நிறுவனம் தான். இத்தகைய வழக்குத் தொடரப்பட்டதன் பின்னணி என்ன? என்பதைக் கூட ஆராயாமல் அடித்தட்டு மக்களின் வீடுகளை இடிக்க தமிழக அரசு துடிப்பது ஏன்?
 
ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில் வீடுகளை இடிக்கும் பணியை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை குடிசைகளில் இருந்து கோபுரங்களை நோக்கி மேற்கொள்ளாமல், கோபுரங்களில் இருந்து குடிசைகளை நோக்கி மேற்கொள்ள வேண்டும். பணக்காரர்களின் ஆக்கிரமிப்பை அகற்றி விட்டு, அதன் பின்னர் ஏழைகள் வீடுகளை அகற்றுவது குறித்து பரிசீலிக்கலாம். அப்போதும் கூட அவர்கள் வாழ்வதற்கான வாழ்விடங்களை அருகிலேயே அமைத்துத் தர வேண்டும். கண்ணையாவின் தீக்குளிப்புக்கு காரணமான அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
 
கோவிந்தசாமி நகர் மக்களின் வாழ்வுரிமையை காப்பதற்காக தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்த கண்ணையாவுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்; குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.'' 
 
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கல்பாக்கம் அணுமின் நிலைய தேர்வை இந்தியில் நடத்துவதா? ராமதாஸ் கண்டனம்