சென்னையில் கல்லறை அருகே மரம் விழுந்து மயங்கி கிடந்தவரை காப்பாற்றிய பெண் காவலருக்கு கமல்ஹாசன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா நகருக்குட்பட்ட பகுதியில் உள்ள கல்லறை ஒன்றில் மரம் சாய்ந்ததில் அங்கு தங்கியிருந்த நபர் காயமடைந்துள்ளார். அவர் மயக்கமடைந்து மரத்தின் அடியிலேயே கிடந்துள்ளார்.
மரத்தை அகற்றியபோது அவருக்கு மூச்சு இருப்பதை பார்த்த அண்ணா நகர் பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி உடனே அந்த இளைஞரை தன் தோளில் தூக்கி ஓடினார். அங்கிருந்த ஆட்டோவை வர செய்து அதில் இளைஞரை வைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அவர் இளைஞரை காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காவல் அதிகாரியை பாராட்டி பதிவிட்டுள்ள கமல்ஹாசன் “சாலையோரம் விழுந்து கிடந்தவரின் உயிரைக் காக்க தூக்கிக்கொண்டு ஓடும் காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரியின் கடமையுணர்ச்சி பிரமிப்பூட்டுகிறது.அவரது வீரமும், சேவையும் போற்றுதலுக்குரியவை. முன்னுதாரண அதிகாரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.