Publish Date: Wed, 04 Oct 2017 (16:51 IST)
Updated Date: Wed, 04 Oct 2017 (16:56 IST)
நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்த நாளான வருகிற நவம்பர் 7ம் தேதியன்று தனது அரசியல் பிரவேசம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே அரசு மற்றும் ஊழலுக்கு எதிரான கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து வருகிறார். இதனால், அவர் அரசியலுக்கு வர வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஒரு கட்டத்தில் விரைவில் தான் அரசியலுக்கு வருவதாகவும், கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை உருவாக்கும் பணிகளை தொடங்கி விட்டதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று காலை ஆழ்வார் பேட்டையில் உள்ள தனது நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, தனது அரசியல் பிரவேசம் தொடர்பான விசயங்களை அவர் விவாதித்திருக்கலாம் எனத் தெரிகிறது. மேலும், தொடர்ந்து மக்கள் பணி செய்யுமாறும், முக்கியமாக டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் பணிகளில் ஈடுபடுமாறு அவர் தனது நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிர்வாகிகள், கமல்ஹாசன் அவரது பிறந்த நாளான நவம்பர் 7ம் தேதி அரசியல் பிரவேசம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என தெரிவித்தனர்.
இதன் மூலம், தனது கட்சியின் பெயர், சின்னம் மற்றும் கொடி குறித்த விபரங்களை கமல்ஹாசன் அன்று வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.