நீட் தேர்வு குறித்த ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் இதுகுறித்து கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில் தமிழக அரசு ஏ.கே.ராஜன் தலைமையிலான நீட் ஆய்வு குழுவை அமைத்தது. இந்த குழு தற்போது நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்துள்ளது.
இந்த அறிக்கை குறித்து ட்விட்டரில் அறிக்கை விடுத்துள்ள மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் “கிராமப்புற மாணவர்கள், தமிழ்வழி பயின்றோர் மருத்துவராகும் கனவை நீட் சிதைக்கிறது. நீட் தேர்வுக்கு முன் தமிழ் வழியில் பயின்ற 14.44 சதவீதம் மாணவர்கள் மருத்துவ படிப்பை பெற்ற நிலையில் தற்போது இது வெறும் 1.7 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த நீட் தேர்வு சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிரானது என்பதற்கு இதுவே உதாரணம்” என கூறியுள்ளார்.
மேலும் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்பித்த ஏ.கே.ராஜன் குழுவிற்கும் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.