மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தகவலை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியது பின்வருமாறு, கமல்ஹாசன் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். அப்போது அவர் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியை ஆதரித்ததோடு, கூட்டணிக்குள் வர விரும்பும் கமலுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் வாழ்த்து தெரிவித்து வரவேற்கிறேன். அவரின் நல்லெண்ணத்திற்கு பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார்.
கட்சியை துவங்கியது முதல் பல அரசியல் தலைவர்களை சந்தித்து வரும் கமல், ஆளும் அரசை விமர்சிக்கவும் தயங்குவதில்லை. மேலும், மக்களை சந்திப்பது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது என கட்சி நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
இது வரை இரண்டு முறை ராகுலை சந்தித்துள்ள கமல், சோனியாவையும் ஒரு முறை சந்தித்து பேசியுள்ளார் என்பதும், காங்கிரஸ் கூட்டணியுடன் கர்நாடகாவில் குமாரசாமி பதவியேற்ற போதும் கமல் அதில் கலந்துக்கொண்டார் குறிப்பிடத்தக்கது.