நடிகர் கமல் அரசியலில் களமிறங்கபோவதாக கூறிவரும் நிலையில், இன்று காலை எண்ணூர் துறைமுக பகுதிகளை பார்வையிட்டார்.
மக்கள் பிரச்சினைகளுக்காக டுவிட்டரில் அரசை எதிர்த்து தனது கருத்துக்களை பதிவிட்டு வந்தார் கமல். பல அரசியல் தலைவர்கள் டிவிட்டர் பேசுவது அரசியல் அல்ல என்றும் விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில், நேற்று தனது டுவிட்டர் பதிவில் வடசென்னைக்கு வரக்கூடிய ஆபத்து குறித்து பொதுமக்களுக்கு கூறியிருந்தார்.
அதில் எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து என்று குறிப்பிட்டிருந்தார். இதனால், இன்று நேரடியாக எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல் குளம் உள்ளிட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
அதோடு அப்பகுதி மக்களையும் சந்தித்து பேசியுள்ளார். மேலும், அங்கு சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மக்களிடம் கேட்டறிந்தார்.
டிவிட்டரில் மட்டுமே காட்டமான கருத்துகளை முன்வைத்து வந்த கமல் யாரும் எதிர்பாராத விதமாக நேரடியாக களத்தில் இறங்கியது அரசியலில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.