நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கொரோனா பரவல் குறித்து தினமும் டுவிட்டுக்களையும் அறிக்கைகளையும் வெளியிட்டு அரசுக்கு அறிவுரை கூறி வருகிறார். அந்த வகையில் தற்போது கிராமங்களில் பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
காத்திடுவோம் நம் கிராமங்களை, கொரோனா தொற்றிருந்து.. விமானங்களில் இருந்து வந்திறங்கிய கொரோனா, இன்று நம் கிராமங்கள் வரை சென்றடைந்திருக்கிறது. ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மட்டும் இருக்கும் கிராமப் புறங்களில், கொரோனா தொற்றினால் ஏற்படும் பாதிப்புக்கள் கவலையளிக்கிறது என்று ஏற்கனவே நாம் சொல்லியிருந்தோம்.
அந்த ஆரம்பச் சுகாதார நிலையங்கள் இருக்கும் நிலையினைக் காணும் போது, அரசுகள் கிராமங்களின் மீது அக்கறையின்றி செயல்பட்டுக்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. திறந்து கிடக்கும் சாக்கடை குழிகள், குப்பைகள் நிறைந்த வளாகங்கள், பணியாளர்கள் பற்றாக்குறையுடன் மருத்துவமனைகள், உபகரணங்கள் இல்லாத பணியாளர்கள் என கிராமப்புறங்களின் ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்தி விட்டு, நகரங்களை கட்டமைத்திருக்கிறது அரசு எந்திரம்.
இந்த கொரோனா காலத்திலும் அதே தவறைச் செய்யாமல் கிராமங்களை அரசு காத்திட வேண்டும் என்கின்ற ஒரு கோரிக்கைக் குரல் இது. நகரங்களின் ஊரடங்கு பொருளாதார தட்டுப்பாடை ஏற்படுத்தும். ஆனால் கிராமங்களில் ஊரடங்கு என்பது உணவு பஞ்சத்தையும், பட்டினியையும் தொடங்கி விடும் என்பதை அரசு மறந்து விடக்கூடாது.
வருமுன் காத்திடுங்கள் என்ற குரலை புறந்தள்ளி இருக்கிறது இவ்வரசு. தொற்று பரவத் தொடங்கி விட்ட இக்காலத்தில் விரைந்து காத்திடுவோம் என்ற குரலோடு வருகிறோம். கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார மையங்களில் இந்த நோய் தொற்றினை கட்டுப்படுத்த தேவையான உபகரணங்கள் போதுமான அளவு கையிருப்பில் வைக்கப்பட வேண்டும். பராமரிப்பின்றி இருக்கும் ஆரம்பச் சுகாதார மையங்கள் சீரமைக்கப்பட்டு, போதுமான பணியாளர்கள், பாதுகாப்பு கருவிகள், உயிர்காக்கும் மருந்துகள் அங்கே இருந்திட வழி செய்ய வேண்டும். மக்களுக்குச் சரியான விழிப்புணர்வினை ஏற்படுத்தி நோய்த்தொற்று குறித்த தேவையற்ற பயத்தையும் போக்கிட தீவிரமான முயற்சிகள் கையிலெடுக்கப்பட வேண்டும்.
கிராமங்களைக் கைவிடும் எந்த சமூகமும் வளர்ந்த நாகரீகமான சமூகம் அல்ல, அது வளர்ச்சியுமல்ல என்பதை வரலாறு உணர்த்தியிருக்கிறது. இன்று நடக்கும் இந்த அலட்சியப்போக்கினை நாளைய வரலாற்றில் நாம் எவ்வாறு பதிவிட போகிறோம் என்ற கேள்வியோடும், அக்கறையோடும் சொல்கிறேன். கிராமங்களை காத்திடுவோம். நாமே தீர்வாவோம்’ இவ்வாறு கமல்ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்