திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு தமிழக மக்களையே உலுக்கியுள்ள நிலையில் அவருக்கு மெரினாவில் இடமில்லை என்ற தமிழக அரசின் முடிவு அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இந்த நிலையில் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் வேண்டும் என ரஜினிகாந்த் ஏற்கனவே தனது டுவிட்டரில் வலியுறுத்திய நிலையில் தற்போது கமல்ஹாசனும் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்ணா இருந்தபோது கழகம் காத்திட வளர்ந்த இரு தம்பிகள் கலைஞரும் எம்ஜிஆரும். அவர்கள் மூவரையும் ஒரே இடத்தில் வைத்து மரியாதை செய்வதே மாண்பு. எம்ஜிஆருக்கு பிறகு கட்சியில் சேர்ந்த கடைக்குட்டிகளுக்கு மாண்பு இல்லாதது சோகமே. எம்ஜிஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால், கண்டிப்பாய் அண்ணாவின் தம்பியை அவரருகில் கிடத்தியிருப்பார். இவ்வாறு கமல்ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.