கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் இன்று அதிகாலை சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் இருந்ததாக முதலில் தகவல் வந்தது. ஆனால் அப்பல்லோ மருத்துவமனை கேரள முதல்வருக்கு வருடாந்திர மருத்துவ சோதனை செய்ததாக அறிக்கை வெளியிட்டது.
இந்த நிலையில் மருத்துவ சோதனைக்கு பின்னர் கேரள முதல்வர் பினராயி விஜய், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்தார். அப்போது நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், கேரள முதல்வரை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த சந்திப்பு ஒருசில நிமிடங்கள் மட்டும் நடந்ததாகவும், இதுவொரு அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை என்றும் இருதரப்பினர்களும் தெரிவித்தனர்.
அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன்னரே ஓணம் பண்டிகையின்போது கேரள முதல்வரின் வீட்டிற்கு கமல்ஹாசன் சென்று அவரிடம் ஆசிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் மனிதக்கழிவுகளை அகற்ற ரோபோ பயன்படுத்துவது உள்பட பல விஷயங்களை கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.