Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக முதல்வருக்கு கமல்ஹாசன் எழுதிய கடிதம்!

தமிழக முதல்வருக்கு கமல்ஹாசன் எழுதிய கடிதம்!
, வியாழன், 18 பிப்ரவரி 2021 (21:12 IST)
மதுக்கடைகளை குறைக்க வேண்டும் என்றும், மதுக்கடைகளை தனியாருக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றும் கூறி  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
மது போதையினால் குற்றங்கள் பெருகுவதும், குடும்பங்கள் சீரழிவதும் தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டன. குடும்ப வன்முறை தொடங்கி காவல் அதிகாரிகளைத் தாக்குவது வரை சென்றுவிட்டது. மதுக்கடைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்படும் என்கிற வாக்குறுதிகள், கொடுத்தவருடனேயே மறைந்துவிட்டன. மதுவினால் ஏற்படும் தீமைகளைக் களைய அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென மக்கள் நீதி மய்யம் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகிறது. 
 
கொரோனா சமயத்தில் மதுக்கடைகளைத் திறக்க அனுமதிக்கக் கூடாது என்று நீதிமன்றம் சென்றோம். மது விற்பனை குறைக்கப்பட வேண்டும். மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் முதலாவது பொதுககுழு கூட்டத்தில் தீர்மானம் இயற்றினோம். 
 
மது விற்பனையை அரசு ஏற்று நடத்த வேண்டிய காரியம் இல்லை, ஐஏஏஸ் அதிகாரிகளை நியமித்து இலக்குகளை நிர்ணயித்துப் பெருக்க வேண்டிய தொழிலும் இல்லை. கல்வி, சுகாதாரம், மருத்துவம், குடிநீர், சட்டம் ஒழுங்கு, தொழில் வளர்ச்சி, விவசாயத்துறை வளர்ச்சி என்று அரசின் கவனமும் ஆற்றலும் செலவிட வேண்டிய விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. மதுவால் வரும் வருமானம் நல்லரசுக்கு அவமானம். 
 
கொரோனாவினால் வருவாய் இழந்த ஏழை மக்கள் பொங்கல் திருவிழாவைக் கொண்டாட ரேஷன் கடை வாயிலாக கொடுக்கும் பணத்தை மதுக்கடைகளின் மூலமாகத் திரும்ப வசூலித்து விடுகிறோம் என்று அமைச்சரே பேசு அளவுக்கு தமிழகத்தின் நிலைமை இழிந்துபோய்க் கிடக்கிறது.  
 
மாநில அரசு மதுக்கடைகள் விஷயத்தில் உறுதியான நடவடிக்கைகளில் இறங்கியாக வேண்டும். இப்போதிருக்கும் மதுக்கடைகளின் எண்ணிக்கை உடனடியாக பாதியாகக் குறைக்கப்பட வேண்டும். மீதமுள்ள கடைகளைக் கூட படிப்படியாக தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும். மது விற்பனை தனியார் வசம் இருந்த போது இத்தனைக் கடைகள் இல்லை. மதுப்பழக்கம் இப்படி கட்டற்றுப் பரவில்லை, தனியார் கடைகளுக்கும் மிக மிக மட்டுறுத்தப்பட்ட வினியோகங்கள், கடுமையான கண்காணிப்புகள், நேரக்கட்டுப்பாடு ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.  
 
எங்கெல்லாம் மதுக்கடைகள் இருந்ததோ, இருக்கிறதோ அங்கெல்லாம் தரமான இலவச மதுப்பழக்கத்தினர் மறுவாழ்வு மற்றும் வழிகாட்டி மையங்கள் அரசால் தொடங்கப்பட வேண்டும். மது விலக்கை அமல்படுத்தும் நிலை நோக்கி முதல் அடி எடுத்து வைக்க வேண்டும்.  மக்கள் நலனுக்காக இதைச் செய்ய வேண்டிய அரசு அக்கறை இல்லாமல் இருக்கிறது. 
 
தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும். பெண்களைத் தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைப்பதற்காகவாவது தமிழக அரசு உடனடியாக மதுக்கொடுமை விஷயத்தில் பார்வையைச் செலுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது 
 
இவ்வாறு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விவசாயிகளை வீட்டை விட்டு துரத்துவது தான் வெற்றி நடை போடும் தமிழகமா? உதயநிதி