மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், இந்து தீவிரவாதம் குறித்து பேசிய கருத்துக்கு பலமுனைகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பி கொண்டிருக்கும் நிலையில் தொடர்ந்து கமல் தான் பேசியதை நியாயப்படுத்தி வருகிறார். இதனால் அவரது சமீபத்திய கூட்டங்களில் இஸ்லாமியர்களின் கூட்டம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கமல்ஹாசனை நாகரீகம் இன்றி தாக்கி பேசுபவர்களுக்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்க ஆர்ப்பாட்ட கூட்டம், கண்டனக்கூட்டங்களை நடத்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் திட்டமிட்டு வருகின்றனர். ஆனால் இந்த முயற்சிக்கு கமல் முட்டுக்கட்டை போட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
மக்கள் நீதி மய்யம் குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் அன்பு வேண்டுகோள். நிகழும் சம்பவங்கள், நம் நேர்மைக்கும் பொறுமைக்கும் நடக்கும் அக்னிப் பரிட்சை. ஆர்ப்பாட்டக் கூட்டம் நம்மை வன்முறைக்கு வலிந்து இழுக்கும். மயங்காதீர்! அவர்களின் தீவிரவாதம் நம் நேர்மைவாதத்திற்கு முன் தோற்கும். நாளை நமதே! என்று கூறியுள்ளார்.
கமல்ஹாசனின் அறிவுரையை ஏற்று கண்டனக்கூட்டங்கள் திட்டத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் கைவிட்டதாக தெரிகிறது. கமல் தனது கட்சியின் தொண்டர்களை சரியாகவே வழிநடத்துவதாகவே நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.