முன்னாள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் மீது சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் அவர் ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, "ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்காக கமல் ஹாசன் தனது ஆன்மாவை எப்போதோ விற்றுவிட்டார். அதனால் தான் அவர் தி.மு.க.வுக்கு சாதகமாகப் பேசுகிறார்" என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
த.வெ.க. தலைவர் விஜய் நடத்திய கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்துப் பேசிய கமல் ஹாசன், சம்பவத்தைப்பார்வையிட்ட பின்னர், "நிகழ்ச்சியை நடத்தியவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். இது பழி சுமத்தும் நேரம் அல்ல. முதலமைச்சர் மரியாதையுடன் செயல்பட்டுள்ளார், அவர் பாராட்டுக்கு உரியவர்" என்று மு.க. ஸ்டாலினுக்கு ஆதரவாக பேசியிருந்தார்.
இதற்கு பதிலளித்த அண்ணாமலை, "கமல் ஹாசன் ஒரு சிறந்த நடிகர். ஆனால், அரசியலில் அவர் பேசுவதெல்லாம் ஒருதலைபட்சமாக, தி.மு.க.வுக்கு சாதகமாகவே உள்ளது. நிர்வாகத்தில் தவறு இல்லை என்று அவர் சொல்வதை யாரும் ஏற்க மாட்டார்கள்" என்று கடுமையாக சாடினார்.