ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை துறையை முடக்காதீர்கள் என கமல்ஹாசன் அரசுக்கு வேண்டுகோள்.
கோயம்புத்தூரில் கொரோனா பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்களுக்கு போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தி தரவில்லை என செய்தி வெளியிட்ட இணைய இதழின் பத்திரிக்கையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
பிறகு அவர்களை விடுதலை செய்த போலீஸார் அந்த இணைய இதழின் பதிப்பாசிரியர் ஆண்ட்ரூ சாம் ராஜபாண்டியனை கைது செய்துள்ளனர். இதற்கு ஏற்கனவே கண்டனம் தெரிவித்தார் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின். இவரை தொடர்ந்து அமமுக பொதுச்செயளாலர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்தார்.
இவர்களை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, கோவையில் மருத்துவர்களுக்கு உணவில்லை, மக்களுக்கு உதவிகள் போய் சேரவில்லை என உண்மையை சுட்டிக்காட்டினால் சிறையா?
தவறுகளை சரி செய்யாமல், உண்மையை சொன்னதற்கு சிறையில் அடைப்பது சர்வாதிகாரம். ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை துறையை முடக்காதீர்கள். கைது செய்தவரை விடுதலை செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.