அதிமுக தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய கே.பி முனுசாமி “தமிழகத்தில் திராவிட கட்சிகள் உள்ளவரை தேசிய கட்சிகள் நுழைய முடியாது” என தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக தேர்தல் பரப்புரையை தொடங்கும் பொதுக்கூட்டம் சென்னை ஒய்,எம்சிஏ மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ”அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி. கூட்டணி ஆட்சிக்கு தமிழகத்தில் இடமில்லை. அந்த எண்ணத்தோடு வரும் தேசிய கட்சி அதிமுகவுக்கு தேவையில்லை” என கூறியுள்ளார்.
மேலும் “கலைஞர், ஜெயலலிதா இல்லாததால் ஆளுமை இல்லாத தமிழகத்தில் இடையில் புகுந்து பலர் பயன்பெறலாம் என நினைக்கின்றனர். எந்த தேசிய இயக்கத்தையும் தமிழகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்தது திராவிட இயக்கம்” என்று கூறியுள்ளார்.