Publish Date: Thu, 19 May 2022 (22:11 IST)
Updated Date: Thu, 19 May 2022 (22:14 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர் பேரறிவாளன். பின்னர் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. பின்னர் தற்போது உச்சநீதிமன்றம் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் காரிய கமிட்டி, விடுதலை செய்யப்பட்டாலும் செய்த குற்றம் செய்ததுதான் என கருத்து தெரிவித்துள்ளதுடன், இன்று பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் வாயை வெள்ளை துணியால் மூடிக்கொண்டு அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள நேரு சிலை முன்பாகவும் காங்கிரஸார் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இதுகுறித்து கூறியுள்ளதாவது: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் அந்த ஏழு பஎரையும் குற்றவாளிகள் என அறிவித்தது. ஆனால் இன்றைக்கு உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை மட்டும் விடுதலை செய்துள்ளது.
பேரறிவாளன் ஒரு தமிழன் என்பதால் அவரை விடுதலை செய்ய வேண்டுமென பெரும்பாலானோர் கூறுகின்றனர். ஒரு தமிழன் குற்றத்திற்கு உள்ளானால் அவரை விடுதலை செய்துவிடலாம் என்பது நியாயமா? இன்று நீதியும் செங்கோலும் கீழே சாய்ந்து விட்டன என்பது என்னுடைய கருத்து எனத் தெரிவித்துள்ளார்.