ஆன்லைன் வேலை வாங்கித் தருவதாக மெசேஜ் அனுப்பி அதில் இருந்த லிங்க்கை க்ளிக் செய்தால் வேலை கூறி மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மோசடியாக வந்த லிங்கை க்ளிக் செய்த ரூ.2.50 லட்சம் வரை பணத்தை இழந்த சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் அருண் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரும்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அருண் செலுத்திய வங்கிக் கணக்கு எண்ணை வைத்து நடந்த விசாரணையில், செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த நல்லம்பட்டி தேஜா ( 22), அண்ணாநகர் சாந்தோம் காலனியைச் சேர்ந்த விஜய் (24), ஹைதராபாத்தைச் சேர்ந்த சரஸ்வதி (23) ஆகியோர்தான் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டது தெரியவந்து, மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கமிஷனுக்காக போலி வங்கிக் கணக்கு தொடங்கி அதன் மூலம் பணத்தைப் பெற்று, மோசடியில் ஈடுபட்ட வேறொரு கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது .
இந்த மோசடியில் வட மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று மூளையாகச் செயல்பட்டதும், மேலும் வடமாநில கும்பல் இவர்களது வங்கி கணக்கில் பணத்தைப் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து, 15 போலி ஏடிஎம் கார்டுகள், 3 செல்போன்கள் மற்றும் 15 வங்கி புத்தகங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய வடமாநில கும்பலை காவல்துறை தேடி வருகிறது.